நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் மறுப்பு!
கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். திலீப்பின் உத்தரவின்பேரிலேயே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றம்சாட்டிய போலீஸார், அவர் மீது கடத்தல் சதி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனிடையே, தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் திலீப் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி கோர்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், அவரது போலீஸ் காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று நடிகர் திலீப் சார்பில் கேரள ஐகோர்டில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இந்த மனு இன்று விசாரணை செய்த கோர்ட் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.