2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்கில் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானது. கன்னட மொழி திரைப்படமான இப்படம் வெளிவந்த பொழுது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, திரையரங்குகளில் ஒரு சாதாரண படமாகவே கடந்து சென்றது. இருப்பினும் ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான பின்பு இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று இந்தியா முழுக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா சூழல் காரணமாக தள்ளி சென்றது. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதியான  இன்று வெற்றிகரமாக திரையரங்கில் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!


பம்பாயில் ரவுடியாக இருந்த கதாநாயகன் யாஷ், பெங்களூருவில் உள்ள தங்க சுரங்கத்தை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருந்தது, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடங்குகிறது. முதல் பாதியில் கதை சொன்ன அனந்த் நாக் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது மகனான பிரகாஷ்ராஜ் மீதி கதையை சொல்கிறார்.  கேஜிஎஃப்-ஐ கைப்பற்றிய யாஷ் அதனை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இதனால் இதனை அடைய நினைத்த மற்ற ரவுடிகளுக்கும், நீண்ட நாட்களாக இதனை அடைய துடிக்கும் சஞ்சய் தத்திற்கு, இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் போர்தான் கேஜிஎஃப் 2 படத்தின் ஒன்லைன்.


படத்தின் கதாநாயகன் யாஷ், இந்த கதையை வேறு யாரும் நடித்திருக்க முடியாத அளவிற்கு மாஸ் காட்டியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுகிறது.  அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் அதிகமாக இருந்தாலும் அவை நம்பும் படியாகவே உள்ளது.  முதல் பாதியில் இருந்தேன சஞ்சய் தத்திற்க்கு ஆங்காங்கே பில்டப் கொடுக்கப்பட்டிருந்தது. ஏன் அந்த பில்டப் கொடுக்கப்பட்டது என்பதற்கு இரண்டாம் பாதியில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் சஞ்சய் தத். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், பிறகு மீண்டும் உடல்நிலை சரியாகி இப்படத்தில் நடித்தார்.  யாஷிற்கு எதிராக அவர் நின்று சண்டையிடும் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதம்.  படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் அளவிற்கு யாஸின் கதாபாத்திரம் உள்ளது. 



இதற்கு மேல் இது போல் ஒரு படத்தை யாரும் எடுத்துவிட முடியாது என்று சொல்லும் அளவில் படத்தை இயக்கி உள்ளார் பிரசாந்த் நீல்.  தன் அம்மாவிடம் யாஷ் சொல்லிய ஒரு வார்த்தையை மையக்கருவாக வைத்து கொண்டு இப்படி ஒரு மிரட்டலான திரைக்கதையை அமைத்துள்ளார்.  இடைவெளிக்கு முன்பு வரக்கூடிய சண்டைக்காட்சி, இரண்டாம் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி, பாராளுமன்றத்தில் நடைபெறும் காட்சி போன்றவை பிரம்மாண்டத்தின் உச்சம்.  கேஜிஎஃப் முதல் பாகத்தினை அனைவருமே கிட்டத்தட்ட 10 முதல் 15 தடவைக்கு மேல் பார்த்திருப்போம், ஆனாலும் எங்கும் சலிப்புத் தட்டாது.  அதேபோல் தான் கேஜிஎப் 2 படமும் உள்ளது.  ஒவ்வொரு சீனும் காட்சிப்படுத்திய விதம், எடிட்டிங், பிஜிஎம் என ஒவ்வொன்றுமே இக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  இப்படி ஒரு படைப்பை உருவாக்க சம்மதித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்க்கு தனி பாராட்டுக்கள். 



கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் இக்கதை ஒரு இடத்திலும் போர் அடிக்கவில்லை.  கேஜிஎப் 2 திரைப்படம் இதற்கு முன்பு வசூல் சாதனை புரிந்த படங்களை அடித்து நொறுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  ஆக்சன் காட்சிகளை போலவே சென்டிமென்ட் காட்சிகளும் மனதில் நிற்கிறது.  ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் அர்ச்சனா ஜோயிஸ் மொத்தமாக ஒரு அரை மணி நேரமே வந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி உள்ளார்.  சிறந்த பான் இந்தியா படமாக உருவாகி உள்ள கேஜிஎப் படத்தை மக்கள் ரசிக்கும் படி கொடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.


மேலும் படிக்க | பீஸ்ட் ஹிட்டா ஃப்ளாப்பா... தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR