அமரன் விமர்சனம் : துப்பாக்கியை கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
Amaran Movie Review In Tamil: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
Amaran Movie Review In Tamil: புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் அமரன். சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்து வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை தூண்டிய படமாக இருந்தது. தீபாவளி முன்னிட்டு ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த படத்தில் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
ஒருவரி கதை:
இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை மேஜர் முகுந்த் கண் வழியாக பார்க்கப்படுகிறது.
முழு கதை:
சிறுவயதில் இருந்து ராணுவம் மீது கொண்ட ஆசையால் ராணுவத்தை இணைகிறார் முகுந்த். கல்லூரியில் படிக்கும் போது தனக்கு ஜூனியர் ஆன இந்துவை காதலிக்கிறார். படத்தின் முதல் பாதி காதல், ராணுவத்தில் சேருதல், காதலுக்கு என் குடும்பத்தின் எதிர்ப்பு என கொஞ்சம் எமோஷனலாக நகர்கிறது.
ஜம்மு காஷ்மீரில் கிளிர்ச்சிக்கும், கொடூர தாக்குதல்களுக்கும் முக்கிய குற்றவாளியாக இருப்பவரை, முகுந்த் போட்டுத்தள்ளுகிறார். அதன் பிறகு அவன் இடத்திற்கு வரும், உயிரிழந்த குற்றவாளியின் தம்பி, ஜம்முவில் இருக்கும் இந்திய ராணுவப்படையினரை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார். இவனது திட்டம் வெற்றி பெற்றதா? மேஜர் முகுந்த் எப்படி இறந்தார்? என்பதை அழுத்தமாகவும், ஆணித்தனமாகவும் காண்பித்திருக்கிறது அமரன் திரைப்படம்.
முதல் பாதி காதல்..இரண்டாம் பாதி போர்க்களம்…
ஆக்ஷன் மற்றும் துப்பாக்கிச்சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை உண்மையாகவே போர்க்களத்திற்கு அழைத்து செல்கிறது. ஒவ்வொரு துப்பாக்கி சத்தம் கேட்கும் போதும் மனதிற்குள் பதைபதைக்கிறது. முதல் பாதி, முகுந்த்-இந்து இடையேயான காதல், பெற்றோர்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது, ஹீரோவிற்கு தனது வேலையின் மீதான பிணைப்பு ஆகியவற்றை காண்பிக்கிறது.
இடைவேளைக்கு பின்பு, கணவன்-மனைவி பிரிந்து இருந்தாலும், மனதால் சேர்ந்து இருத்தல், தீவிரவாதிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களால் ஸ்தம்பித்துப்போகும் இராணுவம், மக்களையும், தன்னுடன் ராணுவ வீரர்களாக இருப்பவர்களை காப்பாற்ற ஹீரோ எடுக்கும் முடிவு என நகர்கிறது.
பலம்..பலவீனம்..
படத்தின் பெரிய பலம், திரைக்கதையின் வேகம். பலவீனம், எங்கெல்லாம் எடிட்டிங் செய்து வெட்டி ஒட்டியிருக்கின்றனர் என்பது தெரிந்தது. காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியிருக்கலாம் என்ற குறை மனதின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், அதிரடி சண்டை காட்சிகள் அந்த குறைகளை ஈடுசெய்கின்றன.
மேலும் படிக்க | அரியாசனத்தில் அமர்ந்தாரா அமரன்?... ட்விட்டர் விமர்சனம் இதோ!
நடிப்பு..
சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸாக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். படம் முழுக்க கணவனை பிரிந்து, அவருக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அழும் இவர், கணவனின் இறப்பிற்கு பிறகு வலிமையாக இருந்து அனைத்தையும் தாங்கிக்கொள்வது படம் பார்ப்பவர்களின் மனதை கனமாக்குகிறது.
பல படங்களில் ஜாலியான இளைஞராக திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை, இப்போது ராணுவ வீரராக பார்க்க ஆரம்பத்தில் மனம் மறுக்கிறது. இருப்பினும், காட்சிகளுக்கு ஈடுகொடுத்து வேகமாக நகரும் அவரை பார்க்கையில், மேஜர் முகுந்த் உண்மையாகவே நம் முன் வந்து நிற்பது போல இருக்கிறது. இதற்காக தனது உடலை தயார் படுத்தி, கடும் முயற்சிகள் மேற்கொண்டு நடித்திருக்கும் அவருக்கு பாராட்டுகள். தி கோட் படத்தில் விஜய் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்ட சிவா, தன் கையில் கிடைத்திருக்கும் துப்பாக்கியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
அமரன் திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்ட நாவலை வைத்து எழுதப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், வேகமாக நகரும் காட்சிகளால், “க்ளைமேக்ஸ் சீக்கிரமாக வந்து விடக்கூடாது” என நம்மை நினைக்க வைக்கிறது படம். நீண்ட நாட்கள் கழித்து, நாட்டுப்பற்று மற்றும் வேகமான திரைக்கதையுடன் அமைந்த படத்தை பார்த்த உணர்வை தருகிறது, அமரன் படம்.
சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் பிற ராணுவ வீரர்கள் அதிக கவனம் ஈர்க்கின்றனர். இவர்கள், அதிலும் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரராக வரும் வஹீப், விக்ரம் சிங் உள்ளிட்ட பாத்திரங்கள் மனதை உலுக்குகின்றன. படத்துடன் சேர்ந்து பயணிக்க வைப்பதில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
மொத்தத்தில்..
குடும்பத்துடன், நாட்டுப்பற்று மிக்க நல்ல படத்தை பார்க்க நினைத்தால், கண்டிப்பாக இப்படத்தை பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ