ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.  இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன சரவண விக்ரம்! மொத்தம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார். இயக்குநர் பொன்ராம் பேசும்போது, “இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.


இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது, “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்” என்று கூறினார்.


நடிகர் சேது கருணாஸ் பேசும்போது, “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.


மேலும் படிக்க | தென் மாவட்டத்தில் அரசு என்ன செய்கிறது...? முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கம்!


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது, “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும்  வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.


கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.


இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது.  விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.


மேலும் படிக்க | தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ