தேசிய விருது பெற்ற நஞ்சியம்மாவின் ‘குரல்’ சொல்லும் கதை.!
National Award Winner Nanjiyamma : அட்டப்பாடியின் பழங்குடிப் பெண்ணான நஞ்சியம்மாவின் குரல் சொல்வது என்ன ? அக்குரலின் வழியாக நமக்குக் கிடைக்கும் கலை ரீதியான பரவசம் எதைக் குறிக்கிறது ?
எந்த திரைப்படமென்றாலும் முதல் காட்சி அல்லது முதல் ஐந்து நிமிடங்கள் என்பது அவ்வளவு முக்கியம் என்பார்கள். ஏனெனில், பார்வையாளர்களை அந்த கதைக்குள் படாரென உள்ளிழுக்கும் உத்தியது. அந்த வகையில், மலையாளத்தில் வெளிவந்த ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் முதல் காட்சியே ஓர் கார் ஒன்று கும்மிருட்டுக் காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வளைவு நெளிவுகளில் ஒரு மரவட்டையைப் போல ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத இந்த முதல் காட்சியை கலாபூர்வ அனுபவமாக மாற்றியது நஞ்சியம்மாவின் குரல் தான்!.
காடுகளின் ஊடாக நவீனத்தின் வடிவமான அந்தக் கார் சென்றுகொண்டிருக்கையில், அதே காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் பழங்குடிப் பெண்ணான நஞ்சியம்மாவின் குரலில், ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ என்ற பாடல் ஒலிபரப்பப்படும் போது, ஒருவிதமான பரவசம் தொற்றிக் கொள்கிறது. மலையாளத்தில் வெளியாகி பல மொழி ரசிகர்களையும் வென்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் கதை இங்கிருந்தே தொடங்குகிறது. இந்தக் காட்சிக்கும், அந்தப் பாடலுக்கும் உள்ள பிணைப்பு படத்தின் மையச்சரடு.
மேலும் படிக்க | மதுபாட்டில் திட்டம் - நீலகிரியை சுட்டிக்காட்டி நீதிமன்றம் சொன்ன ‘அட்வைஸ்’.!
ப்ருத்விராஜ், பிஜூமேனன் ஆகியோர் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்தி வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ பாடலைப் பாடிய நஞ்சியம்மாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தமிழ்நாடு - கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைகள் சந்தித்துக் கொள்ளும் சிறிய பள்ளத்தாக்குதான் அட்டப்பாடி. இந்த கிராமத்தில் இயற்கையும், மலைகளும் சூழ வாழ்ந்து வருகிறார் தேசிய விருது வென்ற நஞ்சியம்மா. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, தமிழ்நாட்டின் வசம் இருந்த அட்டப்பாடி, கேரளாவிடம் சென்றது. தற்போது, அட்டப்பாடி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மலைக் கிராமம்!.
தமிழ்நாட்டில் உள்ள கோபனாரியில் பிறந்த நஞ்சியம்மா, கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள நாக்குபத்தி என்ற இடத்திற்கு திருமணமாகி சென்றுள்ளார். அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் நஞ்சியம்மா, இயல்பாகவே பாடலைப் பாடும் திறனைப் பெற்றவர். இதனால், அப்பகுதியில் பரவலாகவே அவர் கவனம் பெற்றிருந்தார். இதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் இருக்கும், ஆசாத் கலா சமிதி என்கிற நடன இசைக்குழுவில் உறுப்பினரானவர், கேரளா மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் கச்சேரிகளிலும் பங்கேற்றுப் பாடியுள்ளார்.
தமிழும், மலையாளமும் கலந்து வீசும் அவரது பாடல், இரு மாநில மக்களையும் தாண்டி, இசைக் கேட்கும் எவருக்கும் மயக்கத்தைத் தரக்கூடியவை. எந்தச் செயற்கைப் பூசல்களும், செயற்கை நுணுக்கங்களும் இல்லாமல் காடுகளில் இருந்து வரும் ஓர் பழங்குடிப் பெண்ணின் அசலான குரல், நஞ்சியம்மாவுடையது.!
அய்யப்பனும் கோஷியும் படம் அட்டப்பாடியில் உருவாக்கப்பட்ட போதே, இயக்குநர் சச்சி, அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரையேனும் ஒருவரை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைத் தெரிவித்திருக்கிறார். அப்படித் தேடுகையில் கிடைத்த பொக்கிஷம்தான் நஞ்சியம்மா. பாடல் பதிவு சென்னையில்தான் நடந்தது. அப்போது காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நஞ்சியம்மா, பாடியபோது இசையில் ரிதத்திற்கும், நஞ்சியம்மாவின் குரலுக்கும் தொடர்பில்லாமல் இருந்துள்ளது.
பின்னர், நஞ்சியம்மாவை பாட வைத்து, அந்த டெம்போவை இசைக்குத் தகுந்தாற்போல், மாற்றிக்கொண்டதாக இசையமைப்பாளர் ஜேக் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்கு கிடைத்த பெருமை!
இந்தப் பாடல் வெளியானதும், நடிகர் ப்ருத்விராஜ், நஞ்சியம்மாவிடமே ஓர் பேட்டியில், ‘ப்ருத்விராஜைத் தெரியுமா’ என்கிறார். அதற்கு அவர், ‘இல்லை’ என்கிறார். அப்போ ‘பிஜூமேனனைத் தெரியுமா’ என்கிறார். அதற்கும் ‘இல்லை’ என்றே நஞ்சியம்மாவிடம் இருந்து பதில் வருகிறது. ‘உங்களுக்கு இந்த இருவரையும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. உங்களை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது’ என்று ப்ருத்விராஜ் சொல்ல, நஞ்சியம்மாவின் முகத்தில் காட்டின் வெட்கம்!
நஞ்சியம்மாவின் குரலில் வெளியான இந்தப் பாடல், வெறுமனே படத்தின் ஒரு பாடலாக வந்துபோகாமல், கதையின் மைய நீரோட்டத்துடன் நெருங்கி இருப்பதால் படம் பார்த்த அனைவருக்கும் இந்தப் பாடல் மறக்க முடியாத அனுபவமாக மாறிப்போனதுதான் யதார்த்தமான உண்மை. ஏனெனில், பழங்குடி மக்களின் பிரதிநிதியாகத்தான் அய்யப்பனாக நடித்திருக்கும் பிஜூமேனன் இந்தப் படத்தில் வந்து போகிறார்.
ஓர் காட்சியில், உக்கிரமான கோபத்துடன் பேருந்தில் இருந்து இறங்கி பொறுமையாக நடந்து வரும் அய்யப்பன், நடந்துகொண்டிருக்கும்போதே தனது கால்களில் உள்ள செருப்புகளைக் கழட்டிவிட்டபடியே நடந்துசென்று தாக்குதலில் ஈடுபடுவார். மிக அற்புதமாக படமாக்கப்பட்ட இந்தக் காட்சி பலராலும் வெகுவாக சிலாகிக்கப்பட்டவை.
காவல்துறை அதிகாரி, நவீன வாழ்வு என ஒருவித இறுக்கமான முகத்தை அணிந்திருக்கும் அய்யப்பனுக்கு வெற்றிலைப் பாக்கு மட்டுமே ஆறுதல். ஆம். படம்முழுக்க அய்யப்பன் வெற்றிலைப் பாக்கு போட்டபடியே இருக்கிறார். நவீன அடையாளங்களின் இந்த முகங்களை கழட்டிவிட்டு தனது பழங்குடி வாழ்வை மீட்டெடுக்கும் ஓர் இடமாகவும், அவரின் இயல்பான உக்கிரத்தை வெளிக்கொணரும் ஓர் இடமாகவும், அந்தச் செருப்புகள் கழட்டிவிடப்படுகின்றனவா என யோசிக்க முடியாமலில்லை.!
கதையின் அந்தப் பக்கம் உள்ள ப்ருத்விராஜின் செல்வாக்கு மிக்க குரியன் கிறிஸ்தவ சமுதாயத்தின் வாழ்க்கைச்சூழலைக் காட்டிலும், இந்தப் பக்கம் உள்ள அய்யப்பனுக்கும், நஞ்சியம்மாவின் பாடலுக்கும் உள்ள ஒற்றுமைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. அதேபோல, அட்டப்பாடி கிராமத்திற்கும், இந்தப் பாடலுக்கும், நஞ்சியம்மாவிற்கும் ஓர் நீண்ட நெடிய மரபின் கதையுண்டு.
மேலும் படிக்க | கேரள விருதைத் திருப்பித் தருகிறேன்: சர்ச்சைகளுக்கு இடையே வைரமுத்து அறிவிப்பு
இதற்கு எடுத்துக்காட்டாக ஓர் பேட்டியில் நஞ்சியம்மா சொல்கிறார், ‘எப்போதாவது சந்தனமரக் காட்டின் மேலே வானத்தில் பறந்து மறையும் விமானத்தைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்ட, நான் இட்டுக்கட்டிப் பாடும் பாடல் இது. இதிலிருக்கும் ‘மெட்டு’ எனது முன்னோர்களுடையது”.
வெறுமனே சாதாரணமாக கடந்துபோக கூடியதல்ல இந்த வரிகள். ‘இந்த மெட்டு எனது முன்னோர்களுடையது’ என்று நஞ்சியம்மா கூறுவதன் மூலம், நாம் சிலாகிக்கும் இந்த மெட்டை அட்டப்பாடியின் மூதாதையர்கள் பாடிப்பாடி தலைமுறைகள் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என அறியமுடிகிறது. பழங்குடி மக்களின் ஓர் நீண்ட நாட்டார் மரபின் தொடர்ச்சி நஞ்சியம்மா. அவரது சொற்களின் வழியே பயணித்தால் அட்டப்பாடியின் இசைப் பாரம்பரியத்தை உணர முடியும் என தோன்றுகிறது.
ஒவ்வொரு தலைமுறைக்கேற்ப அதன் வரிகள் மாறியிருக்கிறதே ஒழிய, அந்த மெட்டு ஒரு அணையா நெருப்பைப் போல பயணித்திருக்கிறது. அதன் நவீன வடிவமே இப்போது நாம் கேட்டு சிலாகித்துக் கொண்டிருக்கும் ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ பாடல். அதனைப் பாடிய கலைஞர் நஞ்சியம்மாவுக்கு இப்போது தேசிய விருது!.
நஞ்சியம்மாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த தேசிய விருது, அட்டப்பாடி பழங்குடி இன மக்களின் நீண்ட நெடிய ஒப்பாரி, குழந்தைப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்களுக்கான ஓர் அங்கீகாரம். நஞ்சியம்மாவின் குரலில் இருப்பது வெறும் ஒலி மட்டுமல்ல. அதில் பழங்குடி மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுக் கூறுகள் என அத்தனையும் உண்டு. இன்னும் நஞ்சியம்மாக்கள் வருவார்கள்!.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ