மனிதர்களுக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதிலும் தமிழர்களுக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும், அதை ஆராதிக்கும் விதமும் அலாதி. பாடலை ரசிக்கும் எவரும் அந்தப் பாடலுக்கு இசையமைத்தவரை, அதை எழுதியவரை கொண்டாடி தீர்க்கிறார்களோ அதே அளவு பாடகர்களையும் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட கொண்டாட்டத்திற்கு உரியவர்களில் ஸ்வர்ணலதா ஒருவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோலிவுட்டில் பல பெண் பாடகர்கள் கோலோச்சி இருக்கின்றனர். அனைவரையும் அனைவருக்கும் பிடித்துப்போகும். ஆனால் ஸ்வர்ணலதா ஸ்பெஷலானவர். ஸ்வர்ணலதாவின் குரலில் எல்லாவிதமான உணர்வுகளும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படும்.



தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை, தாங்க முடியாத சோகங்கள், சொல்ல முடியாத காதல் என பல விஷயங்களுக்கு இளையராஜாவை துணைக்கு அழைத்துக்கொள்வது வழக்கம். பலரை ஆறுதல்படுத்த, உற்சாகப்படுத்த என இளையராஜாவோடு வருபவர்களில் ஸ்வர்ணலதாவுக்கென்று தனி இடம் உண்டு.


‘என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ என ஆரம்பித்து ‘அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி’ என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கையில் அனைவரது மனமும் எங்கோ பறந்து மீண்டும் அமர்வது போல உணர்வுகள் எழுந்து அடங்கும். இசையால், வரிகளால் ஒருவரது ஆழ் மனதை பறக்க வைக்க முடியும். ஆனால் குரலால் அதை செய்வது அவ்வளவு எளிதல்ல. அதை செய்துகாட்டிய மிக சிலரில் ஸ்வர்ணலதா முக்கியமானவர்.



நவீனமயமான உலகத்தில் பிறந்த ஊரில் நடக்கும் விழாக்களை காண்பதற்கு ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டன. ஆனால் உணர்வதற்கு ஸ்வர்ணலதா போன்றோரின் குரல்தான் இன்னமும் இருக்கும் ஒரே வழி. அம்மன் கோயில் கும்பம் இங்கே என்ற பாடலில் ஸ்வர்ணலதா செய்தது நிச்சயம் மேஜிக்கின் உச்சம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலே ஊரில் நடக்கும் திருவிழாக்கள் அனைத்தையும் உணர்த்திக்கொள்ள அவரது குரலும், மின்மினியின் குரலும் வழி செய்திருக்கும்.


மேலும் படிக்க | தாமரை மேலே நீர்த்துளி போல்... இளையராஜா மீது ஏன் வரம்பு மீறிய தாக்குதல்?


இசையும், இசையமைப்பாளர்களும் என்ன கேட்கின்றனரோ அதை மட்டும் செய்யாமல் அந்த இசைக்கு குரல் இலக்கணம் சேர்த்து அழகாக்கிய குரல்களில் ஸ்வர்ணலதாவின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் திருக்குறள் மட்டுமில்லை ஸ்வர்ணலதாவின் குரலும் மனிதர்களின் பொக்கிஷ சொத்து.


எந்த இசையமைப்பாளருடனும் ஸ்வர்ணலதா இணைந்தாலும் அந்தப் பாடல் வேறு தளத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. வித்யாசாகர் இசையமைத்த திருமண மலர்கள் தருவாயா பாடலில் திருமணமாகப்போகும் பெண்ணின் எதிர்பார்ப்பு, ஏக்கம், காதல் என அனைத்தையும் குரல் மூலம் கொண்டுவந்து மேஜிக் செய்திருப்பார்.



ஏ.ஆர். ரஹ்மான் ஸ்வர்ணலதா குரலை பல பரிமாணங்களில் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக முக்காலா முக்காபுலா பாடலில்  “ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடிவருது” என்ற வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரல் பனிக்கட்டி ஒன்றில் பூ விழுந்தது போன்ற அதிர்வை எழுப்பி சென்றிருக்கும்.


குச்சி குச்சி ராக்கம்மா பாடலின் இரண்டாவது சரணத்தில் ஸ்வர்ணலதாவின் என்ட்ரி அழகியலின் உச்சம். சிறகு நீங்கினால் பறவையில்லை என்று இரண்டாவது சரணத்தை அவர் ஆரம்பித்து தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு என்று அந்த சரணத்தை அவர் முடிக்கையில் தன் குரலால் எவ்வளவு ஏற்ற இறக்கங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்பை, குறும்பை வெளிக்கொணர முடியுமோ அதை அனுபவித்து வெளிப்படுத்தியிருப்பார். முக்கியமாக ஹரிஹரன் குரலை மீறி அதை செய்வதெல்லாம் அசாத்தியங்களில் ஒன்று.


ஊடல், கூடல், பிரிவு என எந்த உணர்வுக்கும் ஸ்வர்ணலதாவின் குரல் அர்த்தம் செய்து அனுபவித்திருக்கும். குளிருது குளிருது பாடலில் அவரது குரல் பனியறையில் தனித்து இருக்கும் ஒருவரை அணைத்து எரிக்கும் தன்மையை ஒத்திருப்பது. அதேபோல், “எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடல்.காதலர்களுக்குள் ஊடல், காதலியைத் தேடி காதலன் வருகிறான் என்ற வழக்கமான கோலிவுட் காதல் பாடல் சூழ்நிலையில் ஸ்வர்ணலதாவின் குரல் சேர்ந்த பின்பு அந்தச் சாதாரண சூழலே அதிசய சூழல் ஆனது.


இப்படி ஸ்வர்ணலதாவின் குரலுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம். இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் என வைரமுத்து ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரி ஸ்வர்ணலதாவுக்கும் முழுமையாக பொறுந்திப்போகும். அவரது குரல் சிரித்தது, அழுதது, குறும்பு செய்தது, துள்ளியது, வாழ்ந்தது. அதனால்தான் அவர் இறந்து ஒரு தசாப்தம் முடிந்தும் அவரது குரலை இன்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.


மேலும் படிக்க | சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா!


பல மொழிகளில் 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடுவது என்பது எண்ணிக்கை ரீதியிலான பெருமை மட்டும் இல்லை. பல மொழிகளின் உணர்வுகளையும் வெளிக்காட்டி; அடையாளம் துறந்து அனைவரிடமும் வசிப்பதற்கு ஈடான பெருமை. ஸ்வர்ணலதாவுக்கு அப்படிப்பட்ட பெருமை உண்டு. ஆம், ஊரெல்லாம் ஸ்வர்ணலதா பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR