பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் பான் இந்தியா திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. அந்த வகை இதற்கு முன்னால் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படமும் பான் இந்தியா படமாக வெளியானது. தற்போது ராதே ஷ்யாம் திரைப்படமும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ஜெகபதி பாபு, ஜெயராம், முரளி சர்மா போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்றது. பின்பு சரியான வெளியீட்டு தேதி கிடைக்காமல் தள்ளிப்போனது, ஒருவழியாக தற்போது மார்ச் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது ராதே ஷ்யாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பொழுது போகவில்லை என்று எடுக்கப்பட்டதா மாறன்? திரை விமர்சனம்!


ராதே ஷ்யாம் படத்திற்கு 300 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முன்னணி ஓடிடி நிறுவனங்கள் நேரடியாக வெளியிடுவதற்கு கேட்ட போதிலும் படக்குழு திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தது.  உலகளவில் சிறந்த கைரேகை நிபுணரான பிரபாஸ் சொல்லும் எந்த ஒரு கணிப்பும் தப்பானது இல்லை. பிரதமர் இந்திரா காந்தி முதற்கொண்டு இவரிடம் ஜோசியம் கேட்கின்றனர்.  தனக்கு காதல் ரேகை இல்லை என்று பிரபாஸ் எந்த பெண்ணையும் காதலிக்காமல், திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அதே சமயத்தில் டேட்டிங் மட்டும் செய்கிறார், கதாநாயகி பூஜாவை பார்த்த பின் அவருக்கு பிடித்து போகிறது. ஒரு கட்டத்தில் பூஜாவிற்கு பிரபாஸ் மீது காதல் வர, தன்னிடம் காதல் ரேகை இல்லை என்று விலகி செல்கிறார் பிரபாஸ்.  இறுதியில் இவர்கள் இணைந்தார்களா? விதி வென்றதா? என்பது தான் ராதே ஷ்யாம் படத்தின் ஒன்லைன். 



இப்படத்திற்கு 300 கோடி செலவுசெய்து செய்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் தனியாக எடுத்து பிரேம் போட்டு வைப்பது போல் அவ்வளவு அழகாக உள்ளது.  இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் மற்றும் சினிமாடூ கிராபர் மனோஜ் ப்ரகம்சாவின் உழைப்பு நன்றாக தெரிகிறது. ஆனால் இதே உழைப்பை கொஞ்சம் திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். படத்தில் சிஜி செய்யலாம் ஆனால் ஒரு படமே சிஜியாக இருந்தால் என்ன செய்வது. ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு இடத்தில் சிஜி இடம்பெற்றுள்ளது. கதாநாயகன் பிரபாஸின் முகமும், படம் முழுக்க சிஜி செய்யப்பட்டுள்ளது. இது படத்தை பார்க்கும்பொழுது மிகப் பெரிய உறுத்தலாக உள்ளது. மேலும் பாதி தூக்கத்திலிருந்து எந்திரித்து வந்தது போல் தான் படம் முழுக்க பிரபாஸ் உள்ளார்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும் இன்னும் கொஞ்சம் நடிப்பிலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் பூஜா ஹெக்டே. முதல் பாதி முடியும் வரையில் படத்தின் கதை என்னவென்று சொல்லவே இல்லை, படம் முழுக்க முழுக்க காதல்.. காதல்.. காதல்.. என்று போதும் போதும் என சொல்லும் அளவுக்கு திகட்ட திகட்ட காட்சிகளை வைத்துள்ளனர்.



முக்கிய காட்சியில் ஜெகபதி பாபுவும் ஹீரோ பிரபாஸும் பேசும்படியான ஒரு காட்சி உள்ளது. சரி அதிலிருந்து கதை நகரும் என்று பார்த்தபோது அந்த ஒரு கட்சியுடன் காணாமல் போகிறார்.  இறுதியில் சம்பிரதாயத்திற்கு ஒரு காட்சியில் வருகிறார்.  தமனின் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரின் பாடல்களும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் எந்த ஒரு காட்சிகளையும் மனதில் பதிய வைக்கவில்லை.  க்ளைமாக்ஸ் காட்சிக்காக ஜெயராம் சம்பந்தமே இல்லாமல் கதையில் வருகிறார். மேலும் இது ஒரு பான் இந்தியா படம் என்பதற்காக இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரை நடிக்க வைத்துள்ளனர். இதனால் அனைவருக்குமே லிப்சிங் பிரச்சனை உள்ளது.  ஒரு சதவீதம் மக்கள் தான் காலத்தை வென்று வரலாற்றில் இடம்பெறுகின்றனர் என்ற வசனம் படத்தில் வருகிறது. அதே போல் அந்த ஒரு சதவீத மக்களுக்குதான் இப்படம் பிடித்து போகலாம்.


மேலும் படிக்க | எப்படி உள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்? திரை விமர்சனம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR