நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70–களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். இப்போது அவருக்கு 79 வயது ஆகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இவர் தனது வாழ்க்கை குறித்து காஞ்சனா பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 


விமானப் பணிப்பெண்ணாக இருந்தேன். இயக்குநர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 


46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். எனக்கு வாணிஸ்ரீ நெருங்கிய தோழியாக இருந்தார். நான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கிப் போட்டு இருந்தேன். அந்த சொத்துக்களை எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டேன். 


ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்களை மீட்டேன். உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். திருமணம் செய்து கொள்ளாமலே என் வாழ்க்கையை கழித்து விட்டேன். தற்போது என் தங்கையின் பராமரிப்பில் நன்றாக இருக்கிறேன்.


இவ்வாறு காஞ்சனா கூறினார்