சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்தது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனை அடுத்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார், மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | போர் தொழில் பிரமாண்ட வெற்றி! சரத்குமார் நடித்துள்ள வேறு சில போலீஸ் படங்கள்!
பத்திரிகையில் கார்டூன் வரையும் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். தைரியமில்லாத சத்தியா எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் குப்பத்தில் இருக்கும் மக்களை அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர்களை வேறு பகுதியில் உள்ள அரசாங்கம் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு மாற்றுகின்றனர். அங்கு சென்றவுடன் தான் தெரிய வருகிறது வீட்டை மிக மோசமாக கட்டி உள்ளார்கள் என்று. இந்த சமயத்தில் சத்யாவிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கிறது, அதன் மூலம் இந்த கட்டிடம் இடியப்போகிறது என்று தெரிய வருகிறது. அந்த குரலின் மூலம் அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மாவீரன் படத்தின் கதை.
தொடை நடுவியாக, எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாத ஒரு அமைதியான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அசால்டாக நடித்துள்ளார். தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். தனக்கு மட்டுமே கேட்கும் குரலை ஒவ்வொருவரையும் அவர் மேலே பார்த்து கேட்கும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது. படம் முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோ யோகி பாபு என்று சொல்லலாம். தனது முக பாவனைகளாலும் ஒன் லைன் காமெடிகளாலும் அசத்தியிருக்கிறார். மண்டேலா படத்தில் இருந்தது போலவே ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின்.
ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வரும் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் வழக்கமான கதாநாயகி ரோல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, தனது முந்தைய படத்தை விட இந்த படத்தில் அதிதி சங்கர் அழகாவும் தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். வில்லனாக மிஸ்கின் கலக்கி இருக்கிறார். இனி வரும் ஒவ்வொரு படத்திலும் அவரை வில்லனாக எதிர்பார்க்கலாம், அந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வெறும் வில்லத்தனம் மட்டும் இல்லாமல் அதில் காமெடியும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தெலுங்கு நடிகர் சுனிலுக்கு சிறிய கதாபாத்திரமே என்றாலும் அதில் நன்றாக நடித்துள்ளார்.
ஒரு படைப்பாளிக்கு சமூகத்தின் மீது கோபம் இருந்தால் மட்டும் பத்தாது, அதனை மக்களுக்கு புரியும் படியும் எடுத்துச் சொல்ல வேண்டும், அந்த வகையில் ஒரு சிறந்த அரசியல் படத்தை கொடுத்துள்ளார் மடோன் அஸ்வின். சமூகத்தின் மீதான தனது பார்வையை தனது இரண்டாவது படத்தில் காமெடி கலந்த திரைக்கதையில் கொடுத்துள்ளார். அவெஞ்சர்ஸ் படத்தில் பின்னணி குரல் கொடுத்ததற்கு அனைவராலும் கலாய்க்கப்பட்ட விஜய் சேதுபதி இந்த படத்தில் அதனை முறியடித்துள்ளார், அவரது பின்னணி குரல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பரத் சங்கர் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சிவகார்த்திகேயன் அனிருத்தை மிஸ் செய்வது இந்த படத்தில் கண்கூடாக தெரிகிறது. நான்கு ஐந்து இடங்களை மட்டுமே சுற்றி படம் நகர்ந்தாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. முதல் பாதி ஆரம்பித்து இடைவெளி வரும் வரை எங்கும் கண்களை சிதறவிடாமல் திரைக்கதை நகர்கிறது, இரண்டாம் பாதி முதல் பாதியை விட சற்று தொய்வாக உள்ளது. கிளைமாக்ஸ் காட்சி மட்டும் வழக்கமான ஒரு தமிழ் படம் போல் முடிகிறது.
அரசு மக்களுக்கு கட்டி கொடுக்கும் வீடு எந்த அளவிற்கு இருக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதை ஒரு மையப்புள்ளியாக வைத்து கொண்டு காமெடி கலந்த ஒரு பேண்டஸி கதையை கொடுத்துள்ளார் மடோன் அஸ்வின். மாவீரன் - வென்றான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ