இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!
Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றி வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான அமரன் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இனி தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். கமலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், "உயிரே உறவே தமிழே. வணக்கம். என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.
மேலும் படிக்க | அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!
மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. கிறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கடந்த 2 மாதங்களில் பெரும் வெற்றியடைந்த 5 படங்கள்!! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ