நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி, நாளை திரைக்குவரவுள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தினை நெல்லை மாவட்டத்தில் திரையிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது!
 
பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடெக்ஷன் தயாரிப்பில் நடிகர் விஜய்சேதுபதி, ராக்ஷி கன்னா, நிவேதா பெத்துராஜ், சூரி மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு விஜயசந்தர் எனும் இயக்குநரால் திரைப்படமாக்கப்பட்ட சங்கத்தமிழனை விநியோகிக்கும் உரிமையை லிப்ரா நிறுவனம் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கடந்த, 2011-ஆம் ஆண்டு நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தை எடுத்த லிப்ரா புரொடக்சன் உரிமையாளர்  ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் நெல்லையைச் சார்ந்த விக்னேஷ் புரோடக்சன் உரிமையாளர் அன்பழகன் என்பவரிடம் 15 லட்ச ரூபாய் படத்திற்காக கடன் பெற்றதாக கூறப்படுகிறது.



ஆனால் கடன் கொடுத்த அன்பழகன் இறந்துவிடவே அவரது மகன் விக்னேஸ்வரன் லிப்ரா புரொடக்சனிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.  இதுகுறித்து திருநெல்வேலி மண்டல பட விநியோகஸ்தர் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 


கடந்த நவம்பர் 8-அம் தேதி மிக மிக அவசரம் என்ற திரைப்படம் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியானது. இந்த படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து விடுவதாக உறுதி அளித்திருந்தனர். 


ஆனால் குறிப்பிட்ட தினத்தில் பணம் கொடுக்கப்படவில்லை, இந்நிலையில் பணம் கொடுக்காததால் நெல்லை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வெளியாக உள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகர பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் வருகிற 21-ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.