தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெய்பீம் (Jai bhim) திரைப்படம் சிறப்பாக இருந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக ஜெய்பீம் இருந்தது.


ALSO READ ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது! 


இதற்கிடையில் இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல் குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு (Actor Suriya) பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன் அதில் அவரது தியேட்டர்களில் படம் திரையிடுவதை வன்னிய சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அறிக்கைக்கு சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார்.


இந்நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், 


வணக்கம். 


இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.


திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. 


கல்வி, காதல், மோகம், சரி, தவறு,  சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம். 


பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். 


பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். 


அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே \"ஜெய்பீம்\". அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.


கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது... அதைப் படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். 


அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும்  எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். 


இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் \"வேதம் புதிது \" முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது?  அது போன்றதொரு படைப்புதான் \"ஜெய் பீம்\" படமும். இதைப் படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது. 


தம்பி சூர்யாவைப் பொறுத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்... தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. 


தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா எனப் பார்ப்பவர்.  அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்... அவர் மீதான வன்மத்தையும்... வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். 


ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு  வரவேண்டாமே. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். 


எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. 


திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்துக் கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்னையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை. 


எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி.எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்... பாரதிராஜா, தலைவர், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.


ALSO READ உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR