பொன்னியின் செல்வனில் ஹீரோயிசத்தை தேடித்தேடி அகற்றினார் மணிரத்னம் - எழுத்தாளர் ஜெயமோகன் ஷேரிங்ஸ்
பொன்னியின் செல்வன் படத்தி தான் எழுதியிருந்த ஹீரோயிச காட்சிகளை மணிரத்னம் தேடித்தேடி அகற்றினார் என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. மணிரத்னத்துடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் குமரவேல் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், படத்தில் பிரமாண்டங்களோ, விஎஃப்எக்ஸோ அதிகம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதள பக்கத்தில், “பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல் பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும். இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.
வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும். இந்தப் படம் இருபதாண்டுகளாவது அவுட் டேடட் (outdate) ஆகக்கூடாது, அடுத்த தலைமுறை பார்க்கவேண்டும் என்றார் மணிரத்னம். ஆகவே யதார்த்தத்தை உருவாக்குவதற்காக மட்டுமே வரைகலை பயன்படுத்தப்பட்டுள்ளதே ஒழிய மிகையாக காட்டுவதற்காக அல்ல. போர் உள்பட எதுவுமே மிகையாக்கப்படவில்லை.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்... அடுக்கடுக்கான காரணங்கள்
காட்சிகளில் மிகைநாடகத் தன்மை, மிகைசாகசத்தன்மை வந்துவிடவே கூடாது என உறுதியாக இருந்தார். நான் எழுதியதிலேயே இருந்த சற்று மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகள் ஒவ்வொன்றாக தேடித்தேடி அகற்றினார் மணிரத்னம். இதில் கூஸ்பம்ப்ஸ் எல்லாம் இருக்காது. இது ஒரு சீரான ஒழுக்கு மட்டுமே.இது மணிரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்கவேண்டும் என்றார்.
இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம். ஆனால், மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தை கடக்கவேண்டும் என்று எண்ணினார். அது நிகழ்கிறது. குறிப்பாக பெண்களின் திரளால்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ