40 வருடங்களுக்கு முன் மாயமான நபர் YouTube-பில் கண்டுபிடிப்பு!!
இம்பாலில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான நபர் ஒருவர் யூடியூப் வீடியோ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மணிபூர் மாநிலத்தில் உள்ள இம்பாலை என்ற இடத்தை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங் (65) என்பவர்.
இவர் கடந்த 1978ம் ஆண்டு வீட்டில் இருந்து காணாமல் போயிருக்கிறார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி மும்பை ரயில் நிலையத்தில் கம்பீர் சிங் பாடியதை வீடியோ எடுத்த ஃபேஷன் டிசைனர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று யூடியூப்பில் கம்பீர் சிங் பாடிய வீடியோ பார்த்த அவரின் குடும்பத்தாரால் அவர் அடையாளம் காணப்பட்டார்.
பின்னர், இம்பால் போலீசாரை அணுகி அவரின் புகைப்படத்தை அளித்துள்ளனர். அவர்களும் புகைப்படத்தை மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பந்த்ரா போலீசார் புகைப்படத்துடன் ரயில் நிலையத்திற்கு சென்று கம்பீர் சிங்கை அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர்.