மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ

Tue, 13 Aug 2024-9:28 am,

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சாதகமான செய்தி கிடைக்கவுள்ளது. நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு மார்ச் மாதம் 4% அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 50% ஆக அதிகரித்தன.

அகவிலைப்படி 50%- ஐ எட்டியதை அடுத்து, டிஏ பூஜ்ஜியம் ஆக்கப்படுமா என்ற பேச்சு எழுந்தது. எனினும், 7வது ஊதியக் குழுவின் படி அகவிலைப்படி 0% -ஐ எட்டினால், அது 0 ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தற்போது அகவிலைப்படியை 0 ஆக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இதை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படைக் குறியீட்டை விட 50% அதிகரிக்கும் போதெல்லாம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் இணைக்க 5வது ஊதியக் குழு பரிந்துரைத்தது. பிப்ரவரி 2004 இல் 50% டிஏ (DA) அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் 6வது ஊதியக் குழு, அகவிலைப்படி  50% -ஐத் தாண்டினாலும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.’ என்று கூறினார்.

மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இந்த திருத்தம் அமலுக்கு வருகின்றது. எனினும் இதற்கான அறிவிப்பு முறையே மார்ச் மற்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வருகின்றது. தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

 

தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. சமீபத்தில் ஜூன மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் ஜூலை 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI - 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான சராசரி AICPI - 126.33)/126.33] x 100. இங்கு, AICPI என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கிறது. 

 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.31,500 என வைத்துக்கொள்வோம். அவரது தற்போதைய அகவிலைப்படி 50%, அகவிலைப்படித் தொகை மாதம் ரூ.15,750 ஆக இருக்கும். 6 மாதங்களுக்கு இது ரூ.94,500 ஆக இருக்கும். ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 53% ஆனால், அகவிலைப்படித் தொகை மாதத்திற்கு ரூ.16,695 ஆகிவிடும். 6 மாதங்களுக்கு இது ரூ.1,00,170 ஆக உயரும்.  

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link