8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இது குறித்த அப்டேட் எப்போது வரும் என்ற ஆவல் அனைவரது மனங்களிலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. 1946 ஆம் ஆண்டில் மத்திய அரசால் முதல் ஊதியக் குழு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் நியாயமான இழப்பீடுகளை உறுதி செய்வதில் தொடர்ச்சியான மதிப்பாய்வுகள் மிக முக்கியமான விதியாக உள்ளன.
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக, 5வது, 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தன. தற்போது அடுத்த அதாவது 8வது ஊதியக் குழுவைப் பற்றிய பேச்சு முழு மூச்சில் நடந்து வரும் நிலையில், இதற்கு முந்தைய ஊதியக் கமிஷன்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
5வது ஊதியக் குழு: அமைக்கப்பட்ட ஆண்டு: ஏப்ரல் 1994, நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஜனவரி 1996, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 2,750. பே ஸ்கேல் 51ல் இருந்து 34 ஆக குறைக்கப்பட்டன. பணிக்கொடை உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
6வது ஊதியக்குழு: அமைக்கப்பட்ட ஆண்டு: ஜூலை 2006, நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஆகஸ்ட் 2008, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 7,000, ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஆரம்பத்தில் 1.74க்கு பரிந்துரைக்கப்பட்டது, பின்னர் 1.86 ஆக அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு (DA) 16% இல் இருந்து 22% ஆக அதிகரிக்கப்பட்டது.
7வது ஊதியக்குழு: அமைக்கப்பட்ட ஆண்டு: பிப்ரவரி 28, 2014, நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: ஜனவரி 1, 2016, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ 18,000, ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.57. குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
8வது ஊதியக் குழு 2026 இல் நடைமுறைக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உயர்வு: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. இது லெவல் 1 ஊழியர்களின் சம்பளத்தை சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளத்தை ரூ.4.8 லட்சமாகவும் உயர்த்த வாய்ப்புள்ளது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன், ஓய்வூதிய பலன்கள் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும். மேலும், 8வது ஊதியக் குழுவிற்கான ஊதிய மேட்ரிக்ஸை வடிவமைக்க 1.92 என்ற ஃபிட்மெட் ஃபாக்டர் பயன்படுத்தப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்கானால், மாத சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது சுமார் 44% ஏற்றம் இருக்கும்.
மோடி அரசு 2025-26ல் 8வது ஊதியக் குழுவை 10 ஆண்டு கால முறைப்படி அமல்படுத்தினால், ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். ஊதியக்குழுவை அமல்படுத்த சுமார் 1 1/2-2 ஆண்டுகள் ஆகும் என்பதால், இப்போது இதற்கான அறிவிப்பு வந்தால்தான், இதை 2026 -இல் அமலுக்கு கொண்டுவர முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.