8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கும். இந்த செய்தி பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
8வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான விவாதங்களை அரசு தொடங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (NC-JCM) பணியாளர்கள் தரப்பு செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் வலுவான நிதி நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதை நோக்கிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்கக்கூடும் என மிஸ்ரா கூறுகிறார். இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய செய்தியாக வந்துள்ளது.
இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
7வது ஊதியக்குழுவின் கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும். இந்த நிலையில், அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓயவூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
NC-JCM செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா சமீபத்தில் இந்த கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை வலுப்பெற்றுள்ளதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மேம்பட்டு வருவதாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற வேண்டும். NC-JCM என்பது அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள சச்சரவுகளைத் தீர்க்கும் ஒரு உரையாடல் தளமாகும். இந்த மன்றம் 8வது ஊதியக்குழு கோரிக்கை தொடர்பாக அரசுக்கு இரண்டு குறிப்பாணைகளை அனுப்பியுள்ளது.
8வது ஊதியக்குழுவில் முக்கியமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை (Basic Salary) நிர்ணயிக்கும் காரணியாகும். இது தற்போது 2.57 ஆக இருந்தது. எட்டாவது ஊதியக் குழுவில் அது 1.92 ஆக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.
சம்பள உயர்வு: 8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் (Minimum Salary) ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக, அதாவது 52% அதிகரிக்கலாம். உயர் பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.4,80,000 ஆக அதிகரிக்கலாம. இது தற்போதைய ரூ.2.5 லட்சத்தை விட 92% அதிகமாகும்.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் தற்போதுள்ள குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது இந்தியப் பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும், இது சந்தையில் தேவையை அதிகரிக்கும். இது சந்தைக்கு புதிய ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கும். இருப்பினும், இது அரசாங்கத்தின் நிதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, அரசு ரூ.1.02 லட்சம் கோடி நிதிச்சுமையை எதிர்கொண்டது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.