8th Pay Commission: அகவிலைப்படி உயர்வுடன் ஊதியத் திருத்தமா? ஊழியர் சங்கங்களின் அதிரடி அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு இன்னும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. 8வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து இன்னும் அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இது குறித்து தற்போது சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் திருத்தங்களை செய்யும் 8வது உதியக்குழு தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடாத நிலையில், அடிப்படை ஊதியத் திருத்தத்தை அகவிலைப்படி உயர்வுடன் இணைக்க குழு பரிந்துரை செய்யும் என்று உயர்மட்ட ஊழியர் சங்கங்கள் கருதுகின்றன.
அகவிலைப்படி 50% ஐத் தாண்டியவுடன், அடிப்படை ஊதியம் தானாகவே உயர்த்தப்பட வேண்டும் என்று 7வது ஊதியக்குழு பரிந்துரைத்ததாக மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வகையில், இப்போது அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50% -ஐத் தாண்டிச் செல்லும். அதன் பின்னர் சம்பள திருத்தம் செய்ய வேண்டும்.
7வது ஊதியக்குழுவில் இது பரிந்துரைக்கப்பட்டாலும், அது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் 8வது ஊதியக் குழு அதையே பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 4% அதிகரித்து, மொத்த டிஏ மற்றும் டிஆர் 50% -ஐ எட்டின.
டிஏ 50% தாண்டியவுடன் அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று 8வது ஊதியக் குழு பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அகில இந்திய ரயில்வே மேன்ஸ் ஃபெடரேஷன் தலைவர் சிவ கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்திற்கு முன் இந்தக் கோரிக்கையை நிச்சயமாக எழுப்புவோம் என அவர் தெரிவித்தார்.
7வது ஊதியக் குழு அறிக்கையின்படி, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% அடைந்தவுடன், வீட்டு வாடகைக் கொடுப்பனவு உட்பட பல அலவன்ஸ்கள் தானாகவே திருத்தம் செய்யப்படும். HRA உள்ளிட்ட இந்த அலவன்ஸ்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்த்தப்பட்டதை மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. எனினும் அடிப்படை ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ தளமான தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளரான (ஊழியர் தரப்பு) மிஸ்ரா, அகவிலைப்படி, அடிப்படை சம்பளத்தில் ஏற்கனவே 50% ஐத் தாண்டிவிட்டதாக அரசாங்கத்தின் முன் சுட்டிக்காட்டியுள்ளார். 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சரவைச் செயலர் டிவி சோமநாதனிடம், ஊழியர் மன்றம் மனு அளித்துள்ளதாகவும் தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.
ஊதிய உயர்வு: பொதுவாக, 10 வருடங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு, அதன் ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைப்பதற்காக சம்பள கமிஷன்களை உருவாக்குகிறது. பிப்ரவரி 2014 இல் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்தால் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்ட போது, அடிப்படை ஊதியத்தை (Basic Salary) நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரியிருந்தன. ஆனால், அந்த நேரத்தில் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரையே நிர்ணயித்தது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது, அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.68 ஆக உயர்த்தலாம் என்று கூறப்பட்டுகிறது. இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் தற்போதைய ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது தவிர, அதிகபட்ச சம்பளமும் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக உயரும் என அனுமானங்கள் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.