நோய்கள் எங்களை வீழ்த்த முடியாது... சாதிக்கும் சில தென்னிந்திய நடிகர் - நடிகைகள்
சினிமா நட்சத்திரங்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் போராட்டத்தில் வெல்ல கடுமையாக உழைக்கின்றனர். அந்த வகையில், சினிமா பிரபலங்களில் பலர் தங்களின் மோசமான உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். தென்னிந்தியாவின் சில முக்கிய நடிகர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ரூத் பிரபு 2022ம் ஆண்டில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய ஆட்டோ இம்யூன் கோளாறு இருப்பதாகக் கூறியிருந்தார். தசை அழற்சி நோயான இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் தசை செல்கள் நிரந்தரமாக அழிந்து இயல்பு வாழ்க்கையே முடங்கும் அபாயம் ஏற்படும். மயோசிடிஸ் நோய் தாக்குதல் 1 லட்சம் பேரில் 22 பேரில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் மம்தா மோகன்தாஸ். சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். பல வருடங்களாக திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் மம்தா மோகன்தாஸ் கடந்த 2023ஆம் ஆண்டு, அரிய வகை விட்டிலிகோ நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். முன்னதாக 2009ம் ஆண்டில், அவருக்கு லிம்போமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், தென்னிந்திய நடிகையுமான ஸ்ருதி ஹாசன் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) எனப்படும் பொதுவான மொழியில் PCOS என்னும் பிரச்சனையை எதிர்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதிலிருந்து விடுபட முறையான உணவு, உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய அடங்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறேன் என்று கூறியிருந்தார்.
'பாகுபலி' பட புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, தனக்கு சிறுநீரகம் மற்றும் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். உங்கள் இதயத்தை கவனிக்காமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தா, சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்றும், இதுபோன்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்க்கையை வாழ்வது கடினம் என்றும் நடிகர் கூறினார்.
கல்பிகா கணேஷ்: ’யசோதா', 'பிரயாணம்' போன்ற ஹிட் படங்களில் நடித்த கல்பிகா கணேஷ் தனது வாழ்க்கையில் கடுமையான் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படுத்தி இருந்தார். 2022ம் ஆண்டில், சமந்தா ரூத் பிரபுவைப் போலவே தானும் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார்.
தீவிர நோயை எதிர்கொண்ட தென்னிந்திய நடிகர்கள்: கடந்த சில ஆண்டுகளாக, வெற்றிப்படஙக்ள் காரணமாகம் தென்னிந்திய திரையுலகின் மீதான ஹிந்தி ரசிகர்களின் மோகம் அதிகரித்துள்ளது. இங்குள்ள நடிகர்களின் சொகுசு வாழ்க்கை முறை நம் கண்ணில் தெரியும் அதே வேளையில், அவர்கள் எதிர்கொள்ளும் பல போராட்டங்கள் பலருக்கு தெரிவதில்லை.