பழைய பான் கார்டை தூக்கிப் போடனுமா...? வருகிறது பான் 2.0... இதன் பயன்கள் என்ன?

Tue, 26 Nov 2024-10:02 pm,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA) வருமானவரி துறையின் கீழ் பான் 2.0 திட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இது டிஜிட்டல் பான்/டான் சேவைகள் மூலம் வரி செலுத்துவோர் பதிவு முறையை நவீனப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட உள்ளது.

 

அமைச்சர் சொன்னது என்ன?: இதற்காக ஒரு ஒருங்கிணைந்த இணையதளம் கொண்டுவரப்படும் என்றும் இந்த நடைமுறை என்பது முழுவதுமாக காகிதமற்ற வகையில், முழுவதுமாக ஆன்லைனிலும் இருக்கும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். குடிமக்கள் தாங்கள் பான் கார்டுக்கென பிரத்யேக QR குறியீட்டைக் கொண்ட அப்டேட்டை இலவசமாக பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். 

 

பான் 2.0 என்றால் என்ன?, எதற்கு இது?: தற்போது, ​​பான் தொடர்பான சேவைகள் e-filing இணையதளம், UTIITSL இணையதளம் மற்றும் Protem e-governance இணையதளம் என மூன்று தளங்களில் விரவியுள்ளது. தற்போது இந்த பான் 2.0 மூலம் இந்த சேவைகள் ஒரு ஒருங்கிணைந்த இணையதளமாக கொண்டுவரப்படும். பான் கார்டு சார்ந்த செயல்முறைகள், அப்டேட்கள், திருத்தங்கள், ஆதார் இணைப்பு, சரிபார்ப்பு போன்ற பான் மற்றும் டான் சேவைகளை இந்த ஒற்றை தளம் நிர்வகிக்கும்.

 

புதிதாக விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே உள்ள பான் கார்டு பயனர்கள், இதற்காக புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவை இல்லை; ஏற்கனவே உள்ள ஒன்றே பொதுமானது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு தற்போதைய பான் எண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. 

சுமார் 78 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். இதில் முகவரி, பிறந்த தேதி அல்லது பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்களைச் செய்ய பான் 2.0 மூலம் ஒற்றை இணையத்தளத்திலேயே நீங்கள் பான் கார்டுகளை அப்டேட் செய்துகொள்ளலாம். 

 

இதற்கான விண்ணப்பிக்கும் முறை, காலக்கெடு ஆகியவை குறித்த விவரங்கள் இன்னும் வருமான வரித்துறையால் அறிவிக்கப்படவில்லை.

 

விரைவான அணுகல் மற்றும் மேம்பட்ட சேவை தரத்தை இது வழங்கும். மேலும், துல்லியமான மற்றும் நம்பகமான தகவலையும் உறுதி செய்கிறது. காகிதமற்ற வகையில், எவ்வித கூடுதல் செலவுகள் ஏதுமின்றி பயனர்களால் பான் கார்டு சார்ந்த செயல்முறையை மேற்கொள்ளலாம்.   

 

PAN 2.0 திட்டம் டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்துவோர் பான் சார்ந்த சேவைகளை அணுகக்கூடியதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link