சுப்மன் கில் கேப்டனாக இருக்க தகுதியே இல்லாத பையன் - அமித் மிஸ்ரா
பாட்காஸ்டில் பேசிய அமித் மிஸ்ரா, சுப்மன் கில் கேப்டனாக இருக்க தகுதியே இல்லை என தெரிவித்துள்ளார். கில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றும், அவருக்கு ஒரு கேப்டனாக எந்த முடிவும் சரியாக எடுக்கத் தெரியவில்லை, குழப்பமான நிலையில் இருந்ததை நான் பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மரியாதையே இல்லை என தெரிவித்திருக்கும் மிஸ்ரா, அவர் பணம், புகழ் வந்தவுடன் நடவடிக்கைகள் எல்லாம் மாறிவிட்டது என கூறியுள்ளார்.
கங்குலி, சச்சின், டிராவின், தோனி போன்றவர்கள் எல்லாம் கிரிக்கெட் லெஜண்டுகள். அவர்களுக்கு இருக்கும் மரியாதையே வேறு. ஆனால் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டு அடிப்படையில் விராட் கோலியை ஒப்பிடலாமே தவிர, அவர்களுக்கு இருக்கும் மரியாதை எல்லாம் விராட்டுக்கு இல்லை என மிஸ்ரா கூறியுள்ளார்.
ரோகித் சர்மா ஆரம்பத்தில் கிரிக்கெட் விளையாட வரும்போது எப்படி இருந்தாரோ, அதேபோல் தான் இப்போதும் இருக்கிறார். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் சென்று ஜோக் அடிக்கலாம். ஆனால் விராட் கோலியிடம் அப்படி ஜோக் எல்லாம் அடிக்க முடியாது என மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் அணியில், கிரிக்கெட் வட்டாரத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலிக்கு அந்தளவுக்கு நண்பர்கள் எல்லாம் இல்லை. காரணம் அவருடைய நடத்தை தான் எனவும் அமித்மிஸ்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராகுலை விட ஒரு நல்ல பிளேயரை கேப்டனாக்க முயற்சிக்க வேண்டும், அதுதான் அந்த அணிக்கு நல்லது என கூறியிருக்கும் மிஸ்ரா, ராகுல் மீதும் ஒரு சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
அதாவது, ரவி பிஸ்னோய் தன்னைவிட இளம் வீரர் என்ற ஒரே காரணத்துக்காக லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் என்னை நீக்கிவிட்டு அவரை தேர்வு செய்தார் ராகுல் எனவும் பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் அமித் மிஸ்ரா.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது லக்னோ அணி இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்தவுடன் அணி ஓனர் ராகுலை திட்டியது உண்மை தான், பணம் போட்டவருக்கு கோபம் இருக்காதா என்ன? என்றும் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
மேலும், விராட் கோலி - கம்பீர் இடையே மோதல் போக்கு இருந்தபோது, கவுதம் கம்பீர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டு விராட் கோலியிடம் சென்று பேசியதாகவும், ஆனால் விராட் கோலி முதலில் வந்துபேசவில்லை என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல சர்ச்சைக் கருத்துகளை அமித் மிஸ்ரா தன்னுடைய பாட்காஸ்டில் கூறியிருக்கிறார்.