வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றனர். இதனால் இதனை குறிவைத்து மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டால் மோசடியாளர்களின் வலையில் சிக்கிக் கொள்வீர்கள். இப்போது அரங்கேறும் புதுவகையான மோசடி என்னவென்றால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு வெளிநாட்டு எண் அல்லது வித்தியாசமான எண்ணில் இருந்து யூடியூப் வீடியோக்களுக்கு லைக் இடுவதன் மூலம் தினசரி 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனக் குறுஞ்செய்தி வரும்.
நேரடியாக இப்படி வரும் குறுஞ்செய்திகளைக் பயனர்கள் நம்பமாட்டார்கள் என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். இந்த பகுதிநேர வேலையைச் செய்வதன் மூலம் தினசரி குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்க முடியும் என பேசி மோசடி செய்ய முயற்சிப்பார்கள்.
ஏற்றுக் கொள்பவர்களிடம் குறிப்பிட்ட வேலையைக் கொடுத்து முடிக்கச் சொல்வர்கள். அதன் பின், உங்களிடம் டெலிகிராமில் உரையாடத் தொடங்குவார்கள். டெலிகிராமில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் மூலத்தை அல்லது இடத்தைக் கண்டறிவது கடினம். எனவே, ஆன்லைன் மோசடி நபர்கள் டெலிகிராமிலேயே இது போன்ற மோசடிகளை தற்போது அரங்கேற்றுகிறார்கள்.
டெலிகிராமில் உங்களுடைய வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் கேட்பார்கள். இது போன்ற மோசடிகளில் பயனர்கள் சிக்கிக்கொள்ள நேர்ந்தாலும், இதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம்.
உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் மூலம் தெரியாத நபர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்காதீர்கள். நம்முடைய தனிப்பட்ட தகவல்களைக் கொடுக்காமல், மோசடி நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்யாமல் இருந்தாலே போதும், பெரும்பான்மையான ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிவிடலாம்.