இஷானுக்கு பிசிசிஐ மேல் இதற்குதான் கோபமா...?! வெளியான புதிய தகவல்
இஷான் கிஷன் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் வெள்ளை பந்து பார்மட்களில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார், இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு கடந்தாண்டு இறுதியில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகுவதாக கூறி நாடு திரும்பினார்.
தொடர்ந்து, இந்திய அணியுடன் சுற்றுப்பயணத்திலேயே இருந்ததால், சற்று ஓய்வுக்காக இஷான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் தொடருக்கு சேர்க்கப்படாதது, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துருவ் ஜூரேல் போன்ற விக்கெட் கீப்பரை தேடியது இஷான் கிஷனுக்கும், அணி நிர்வாகத்திற்கும் ஏதோ பிரச்னை இருப்பதை கூறியது.
குறிப்பாக வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இஷான் கிஷன் அதற்கு தேர்வாவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இஷான் கிஷன் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் மட்டுமே அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ராகுல் டிராவிட் பேசியது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டி20இல் ஓப்பனிங் ஸ்பாட்டை ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஜோடி பிடித்துக்கொள்ள அடுத்தடுத்த இடங்களை விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பிடித்திருப்பதால் நடுவரிசையில் விக்கெட் கீப்பர் பேட்டராகதான் இஷான் இடம்பெற முடியும். இருப்பினும், அந்த இடத்தில் ஜித்தேஷ் சர்மா நன்றாக விளையாடி வருவதால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. பேக்அப் வீரராக சஞ்சு சாம்சனும் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜித்தேஷ் சர்மாவை சேர்த்ததுதான் இஷான் கிஷனுக்கு அணி நிர்வாகம் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா உடன் நடைபெற்ற டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இஷான் கிஷன் விளையாடினார். அதில் முதலிரண்டு போட்டிகளிலும் அரைசதமும் அடித்தார். 4, 5ஆவது போட்டியில் அவருக்கு பதில் ஜித்தேஷிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் விளையாடவே இல்லை, ஜித்தேஷ் சர்மாவுக்குதான் முதல் வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஒருநாள் தொடர் ஸ்குவாடில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பில்லை, டெஸ்ட் தொடரில் மட்டுமே இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர் தான், டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இஷான் கிஷனின் இடத்திற்கு ஆபத்தாக இருப்பதால், அவர் இந்திய அணி நிர்வாகத்திடம் அதிருப்தியை வெளிக்காட்டியதாக கூறப்படுகிறது. இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.