இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?
நடப்பு ஐபிஎல் தொடரில் பல அணிகளும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு கடந்த ஆண்டு வேறு நபர்கள் கேப்டனாக இருந்த நிலையில் முறையே ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் அவர்கள் மீண்டும் கேப்டனாக்கப்பட்டனர். சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், குஜராத்திற்கு சுப்மான் கில், மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா, ஹைதராபாத்திற்கு பாட் கம்மின்ஸ் ஆகியோர் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றனர்.
மறுமுனையில் ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன், பஞ்சாப்புக்கு ஷிகர் தவாண், பெங்களூருவுக்கு பாப் டூ பிளெசிஸ், லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த வருடம் போல் இந்த சீசனிலும் கேப்டனாக பொறுப்பேற்றனர். இதில் விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சனின் கேப்டன்ஸி பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. இந்த சீசனில் அவரின் பேட்டிங்கும் அசத்தலாக உள்ளதால் அவரின் அணியும் முன்னணியில் உள்ளது.
அதே நேரத்தில், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான கேல் ராகுலின் கேப்டன்ஸியும், பேட்டிங்கும் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகிறது. லக்னோ அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பும் தற்போது ஊசலாடி வருகிறது. கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி அவரின் கேப்டன்ஸி மீதும் கடும் விமர்சனங்களை பார்க்க முடிந்தது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ராகுல் தேர்வாகவில்லை. அவர் ஓப்பனிங்கில் விளையாடுவதால் தான் அவரை தேர்வு செய்யவில்லை எனவும் அவரின் பேட்டிங்கில் எவ்வித கேள்வியும் இல்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். ஆனால், முன்னர் போல் அதிரடியான ஆட்டத்தை ஓப்பனிங்கில் ராகுல் விளையாட மறுக்கிறார் என குற்றச்சாட்டுகளும் விமர்சகர்கள் தரப்பில் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்விக்கு பிறகு கேஎல் ராகுலிடம், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபட்டதாக கூறப்படுகிறது அதன் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோ அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கும் நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்த ராகுல் 2 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் செயல்பட மாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
லக்னோ அணி அடுத்த போட்டியில் மே 14ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக மோதுகிறது. இன்னும் 5 நாள்கள் இருப்பதால் இன்னும் அதுகுறித்து முடிவெடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. வரும் போட்டிகளில் அதிக நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றாக வேண்டும். கடைசி லீக் போட்டியில் மும்பை அணியுடன் வரும் 17ஆம் தேதி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுலை 17 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி எடுத்திருந்தது. மேலும் அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் அவரை லக்னோ அணி தக்கவைக்காது என கூறப்படுகிறது. எனவே அவர் அடுத்தாண்டு ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. எனவே, அவர் முதல் ஐபிஎல் அணியான பெங்களூருவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தோனி ஓய்வு பெறுவதால் அந்த இடத்தை கேஎல் ராகுல் நிரப்ப வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்களும் கூறி வருகின்றனர். மேலும், கோயங்கே உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2017ஆம் ஆண்டில் ரைஸிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் அணியின் கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து தோனி விலகியது குறிப்பிடத்தக்கது.