விலகிய முக்கிய வீரர்... ஆனால் இது இந்தியாவுக்கு நல்லது தான் - எப்படி தெரியுமா?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாளை தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது போட்டி வரும் செப். 27ஆம் தேதி நடக்கிறது.
செப். 27ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள். இவர்களுக்கு கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது.
இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் இடதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டது.
தற்போது வரை அவர் முழுமையான உடற்தகுதியை பெறாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் ஸ்குவாடில் அஸ்வின், வாஷிங்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அக்சர் படேல் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஒருவேளை அவர் காயத்தால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகும்பட்சத்தில், அஸ்வின் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.
அனைத்து அணிகளும் 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாடை அறிவித்துவிட்டன. தற்போது, அந்த அணியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றால் செப்டம்பர் 28 வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு ஏதேனும் மாற்றங்கள் ஐசிசியின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என தெரிகிறது. எனவே, 27ஆம் தேதி போட்டிக்கு பின்னரும் அக்சர் படேல் உடற்தகுதி பெறாவிட்டால் அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகவே வாய்ப்புள்ளது.
அஸ்வின் கடந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு மிக அவசியமான ஒருவராக திகழ்கிறார். இந்தியாவுக்கு ஆஃப் ஸ்பின் ஆப்ஷன் இல்லாமல் இருந்த நிலையில், அஸ்வின் வந்தால் தீரும். அதுமட்டுமின்றி, அக்சரை போன்று 8ஆவது இடத்தில் நல்ல பேட்டிங் செய்ய கூடியவர் அஸ்வின். எனவே, இது இந்திய அணிக்கு பின்னடவாக அமையாமல், சற்று பெருமூச்சு அளித்துள்ளது.