CSK: ரச்சின் ரவீந்திரா vs டெவான் கான்வே: சிஎஸ்கேவுக்கு பெரிய தலைவலி - யாரை எடுத்தால் நல்லது?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என தெரிகிறது. ஐபிஎல் ஏலத்திற்கான விதிகள் கடந்த மாத இறுதியில் வெளியானது.
ஒரு அணி ஏலத்திற்கு முன்னும் சரி, ஏலத்தில் RTM பயன்படுத்தியும் சரி அதிகபட்சம் 5 Capped வீரர்கள், குறைந்தபட்சம் 1 Uncapped வீரர்கள் என மொத்தம் 6 வீரர்களை தக்கவைக்க வேண்டும்.
அந்த வகையில், சிஎஸ்கே அணி (Chennai Super Kings) நிச்சயம் ஏலத்திற்கு முன் 3-4 Capped வீரர்களை தக்கவைக்கும். அதேபோல், Uncapped வீரராக தோனியை தக்கவைக்கும்.
தோனி கடைசியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடி 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. புதிய விதிகளின்படி, இத்தகைய வீரர்கள் Uncapped வீரர்களாக கணக்கிடப்படுவார்கள். பியூஷ் சாவ்லா, மோகித் சர்மா, விஜய் சங்கர், அமித் மிஸ்ரா போன்றோரும் இந்த வரிசையில் வருவார்கள்.
சிஎஸ்கே (CSK) ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தூபே, தோனி உள்ளிட்ட வீரர்களை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரே ஒரு RTM கார்டை தக்கவைத்து ஏலத்திற்குள் செல்ல நேரிடும். அந்த வகையில், தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிஎஸ்கே வீரர்களான டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் டி20 போல் அதிரடியாக விளையாடினர். எனவே, இருவரில் யாரை RTM பயன்படுத்தி தக்கவைப்பது என சிஎஸ்கே நிச்சயம் யோசனை செய்யும்.
டெவான் கான்வே: டெவான் கான்வே-வை 2022 மெகா ஏலத்தில் வெறும் ரூ.1 கோடி கொடுத்து சிஎஸ்கே தூக்கியது. 2023ஆம் ஆண்டில் இவரின் அதிரடி ஓப்பனிங்கும் சிஎஸ்கே கோப்பையை வெல்ல கைக்கொடுத்தது எனலாம். விக்கெட் கீப்பிங்கும் கான்வேவுக்கு (Devon Conway) கைவந்த கலை என்பதால் இவரை தக்கவைக்கும்பட்சத்தில் தோனிக்கு பின் விக்கெட் கீப்பரை தேட வேண்டிய அவசியம் இருக்காது. 33 வயதான கான்வே கடந்தாண்டு காயம் காரணமாக சிஎஸ்கேவில் விளையாடவில்லை. தற்போதைய டெஸ்டில் 105 பந்துகளில் 91 ரன்களை அடித்து மிரட்டி உள்ளார்.
ரச்சின் ரவீந்திரா: சிஎஸ்கே ரச்சின் ரவீந்திராவை கடந்த மினி ஏலத்தில் வெறும் ரூ.1.8 கோடிக்கு தட்டித்தூக்கியது. இவர் கான்வேவுக்கு பதில் கடந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாட 222 ரன்களை மட்டுமே அடித்தார். ஆனால் இவரை தக்கவைத்தால் அடுத்த மூன்றாண்டுகள் சிஎஸ்கே வெளிநாட்டு ஆல்-ரவுண்டருக்கு கவலைப்படவே தேவையில்லை. இடதுகை சுழற்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும், ரச்சின் (Rachin Ravindra) ஓப்பனிங்கில் மட்டுமின்றி மிடில் ஆர்டரிலும் விளையாடலாம். ரச்சின் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 134 ரன்களை அடித்தார்.
இல்லையெனில் இருவரையுமே சிஎஸ்கே தக்கவைக்கலாம். ரச்சின் ரவீந்திரா - கான்வே இருவரும் ஓப்பனிங்கில் இறங்கி விளாசலாம். மேத்யூ ஹேடன் - மைக் ஹசி போல் இவர்களும் சிஎஸ்கேவுக்கு அதிரடி ஓப்பனிங்கை கொடுக்கலாம். ருதுராஜ் கெய்க்வாட் ஒன்-டவுனில் இறங்கி தன்னை நிரூபிப்பதன் மூலம் இந்திய அணியிலும் தனது இடத்தை உறுதி செய்யலாம்.