ஹனுமா விஹாரி சொன்ன அரசியல்வாதி மகன் இவர்தானா...? அவரின் பதிலை பாருங்க!
Hanuma Vihari: ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆந்திர அணி, மத்திய பிரதேசத்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. அந்த வகையில், ஆந்திர அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான ஹனுமா விஹாரி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தனது சுயமரியாதையை இழக்கும்படி செய்த ஆந்திர அணியில் இனி விளையாட மாட்டேன் என பிரபல கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்திருந்த நிலையில், அரசியல்வாதியின் மகனால் கேப்டன்ஸியை இழந்ததாக ஒரு வீரரையும் குறிப்பிட்டிருந்தார்.
ஹனுமா விஹாரியின் சமூக வலைதளப் பதிவின் சுருக்கம்: "இந்த சீசனில் பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது, நான் 17ஆவது வீரர் ஒருவரை நோக்கி சத்தம் போட்டேன். அவர் அரசியல்வாதியான தனது அப்பாவிடம் புகார் செய்ய, பதிலுக்கு அவரது அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்திடம் கேட்டுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்" என்றார்.
வீரர்கள் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என சங்கம் நினைக்கிறது, குறிப்பாக அவர்களால்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்ற நினைப்பில் உள்ளது எனவும் ஆந்திர கிரிக்கெட் சங்கம் குறித்தும் குற்றஞ்சாட்டினார்.
அந்த வகையில், ஆந்திர அணியில் இடம்பெற்றிருந்த ப்ருத்விராஜ் தான், ஹனுமா விஹாரியால் குற்றஞ்சாட்டப்பட்டவர் என தெரிகிறது. இதுகுறித்து ப்ருத்விராஜ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அதில், தனது பக்க நியாயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Prudhviraj: ப்ருத்விராஜ் அந்த பதிவில்,"நீங்கள் அவரது கமெண்ட் பாக்ஸில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான்தான். நீங்கள் கேள்விப்பட்ட அத்தனையும் முழுமையான பொய்யாகும். விளையாட்டை விட யாரும் பெரியவர்கள் அல்ல. தனிப்பட்ட முறையிலான தாக்குதல் மற்றும் கொச்சையான மொழியில் பேசுவதை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ளவே இயலாது. அன்று என்ன நடந்தது என அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த அனுதாப விளையாட்டுகளை விளையாடிக்கொள்ளுங்கள்" என ஹனுமா விஹாரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இரு வீரர்களுக்கும் இடையேயான இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது, உள்ளூர் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர கிரிக்கெட் சங்கம் தரப்பிலும் நீண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இருப்பினும் ஹனுமா விஹாரி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இதற்கிடையில், அஸ்வினின் யூ-ட்யூப் சேனலில், குட்டி ஸ்டோரி நிகழ்வில் ஹனுமா விஹாரி பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.