இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ஓய்வூதியம், எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை... நோட் பண்ணுங்க மக்களே
இன்று, அதாவது ஜனவரி 1, 2025 முதல் பல வித மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. நிதி ரீதியாக இவற்றின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படும். இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
புத்தாண்டின் முதல் நாளிலேயே ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. அதாவது, 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
OMC எனப்படும் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள், ஜனவரி 1 முதல் விமான எரிபொருளின் விலையை (Aviation Turbine Fuel)குறைத்துள்ளன. வழக்கமான மாதாந்திர புதுப்பிப்புகளின் ஒரு பகுதியாக விமான எரிபொருள் விலைகள் ஜனவரி 1, 2025 அன்றும் திருத்தப்படும். இந்த மாற்றம் விமான டிக்கெட் விலைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO, ஜனவரி 1, 2025 முதல் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையின் (CPPS) ஒரு பகுதியாக ஓய்வூதியம் பெறும் செயல்முறையை ஒழுங்குபடுத்த உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், கூடுதல் சரிபார்ப்புத் தொல்லை இல்லாமல், இனி நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான வசதியை இப்போது பெறுவார்கள். இது தவிர இபிஎஃப் உறுப்பினர்கல் (EPF Subscribers) 24 மணி நேரமும் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க உதவும் பிஎஃப் ஏடிஎம் கார்டை (PF TM Card) EPFO விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், EPF பங்களிப்பு வரம்பு இந்த ஆண்டும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GST போர்ட்டலில் சிறந்த பாதுகாப்பை வழங்க, வரி செலுத்துவோருக்கு MFA எனப்படும் பல காரணி அங்கீகாரம் (Multi-factor authentication) கட்டாயமாக்கப்படும். கூடுதலாக, 180 நாட்களுக்கு மேல் இல்லாத அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே இ-வே பில்களை (EWBs) உருவாக்க முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில், ஜனவரி 1, 2025 முதல், UPI 123Pay -ஐப் பயன்படுத்தி ஃபீச்சர் போன்களில் ரூ.10,000 வரை UPI பேமெண்ட்களைச் செய்யலாம் என அறிவித்தது. இத்தகைய பரிவர்த்தனைகளுக்கான முந்தைய வரம்பு ரூ.5,000 ஆகும்.
மத்திய வங்கி விவசாயிகளுக்கான பாதுகாப்பற்ற கடன்களுக்கான வரம்பை ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு, இன்று முதல் நடைமுறைக்கு வரும். இது விவசாயிகளுக்கு அதிக நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் முதலீடுகளுக்கு உதவும்.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் ஜனவரி 1, 2025 முதல் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். புதிய விதிகளின்படி, பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே இனி ஸ்ட்ரீம் செய்ய முடியும். மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், கூடுதல் சந்தா எடுக்க வேண்டும். முன்னர் பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி NBFC -கள் மற்றும் HFC -களுக்கான நிலையான வைப்பு தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதிகள் இன்று முதல் முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சில விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.