சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் 2025ல் இல்லை?
கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்தனர். ஒரு சிலர் அதிக தொகையிலும், ஒரு சிலர் குறைவான தொகையிலும் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் விளையாடிய டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை மீண்டும் ஏலத்தில் எடுத்தனர். மேலும் ஆர் அஷ்வினையும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்லின் முதல் 3 வாரங்களுக்கு நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், கிளென் பிலிப்ஸ் மற்றும் பெவன் ஜேக்கப்ஸ் ஆகியோர் விளையாடுவது கேள்விக்குறி ஆகி உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல்லை தவறவிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை சில நியூசிலாந்து வீரர்கள் புறக்கணித்தனர். எனவே இந்த முறையும் அதே போல முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
மிட்சல் சான்ட்னர் சமீபத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருவேளை சான்டனர் ஐபிஎல் 2025ல் விளையாடினால், அந்த தொடருக்கும் மட்டும் நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.