CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அவர்களின் சிறந்த வெளிநாட்டு வீரர்களே காரணம் எனலாம். அணிக்கு தேவையான இடத்திற்கு சரியான வீரர்களை தேர்வு செய்வார்கள்.
சிஎஸ்கே (CSK) அணியில் முதல் சீசனில் இருந்து இப்போது வரை நியூசிலாந்தின் ஆதிக்கம் அதிகம். தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் சிஎஸ்கேவுக்கு முதல் சீசனில் விளையாடினார். இப்போது வரை பயிற்சியாளராகவே இருக்கிறார். ஜேக்கப் ஓரம், மெக்கலம், ஸ்டைரிஸ், டிம் சௌதி, சான்ட்னர், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கான்வே, ரச்சின் ரவீந்திரா என நியூசிலாந்து வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதேபோல், இலங்கை அணியின் ஆதிக்கமும் சிஎஸ்கேவில் இருந்தது.
.
முத்தையா முரளிதரன், சமீர கபுகேத்ரா, திலன் துஷாரா, திசாரா பெரேரா, சுரஜ் ரன்தீவ், நுவான் குலசேகரா, தீக்ஷனா, பதிரானா உள்ளிட்டோர் சிஎஸ்கேவில் விளையாடினர். இடைப்பட்ட காலத்தில் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு பிரச்னை எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஒரு அணியால் ஏலத்திற்கு முன்னும், ஏலத்தில் RTM வைத்தும் 6 வீரர்களை தக்கவைக்க முடியும். அந்த வகையில், ருதுராஜ், ஜடேஜா, தூபே, பதிரானா, தோனி ஆகியோரை சிஎஸ்கே முதல்கட்டமாக தக்கவைக்கும். கான்வே அல்லது ரச்சின் ரவீந்திராவை RTM மூலம் ஏலத்தில் தூக்க திட்டமிடும்
அப்படியிருக்க, சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) இந்த மூன்று இலங்கை வீரர்களை எடுக்க அதிக முயற்சி எடுக்கும் எனலாம்.
மகேஷ் தீக்ஷனா: சிஎஸ்கே நிச்சயம் தீக்ஷனாவை (Maheesh Theekshana) விடுவித்தாலும், ஏலத்தில் நல்ல தொகைக்கு சென்று எடுக்க முயற்சிக்கும். சிஎஸ்கே நிர்வாகத்திற்கு பழக்கப்பட்டவர் மட்டுமின்றி 2023 சீசனில் சிஎஸ்கே கோப்பையை வெல்ல தீக்ஷனாவின் பங்கும் அளப்பரியது. எனவே இவருக்கு சிஎஸ்கே முன்னுரிமை கொடுக்கும்.
கமிந்து மெண்டிஸ்: இவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தற்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பேட்டிங்கில் ரன்களை மலைப்போல் குவித்து வரும் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis), இரண்டு கைகளாலும் பந்துவீசும் திறன்கொண்டவர். இவரை எடுக்க ஐபிஎல் ஏலத்தில் பெரிய கத்திச்சண்டையே நடக்கும் என்றாலும் சிஎஸ்கே பெரிய தொகைக்கு சென்று நிச்சயம் எடுக்கும்.
வனிந்து ஹசரங்கா: இவரை எஸ்ஆர்ஹெச் அணி நிச்சயம் தக்கவைக்காது. எனவே ஏலத்தில் இவரை தட்டித்தூக்க சிஎஸ்கே நிச்சயம் போராடும். தரமான ஆல்ரவுண்டர்கள் வரிசையில் டி20இல் ஹசரங்கா நிச்சயம் வருவார். தீக்ஷனாவோ, கமிந்து மெண்டிஸோ கிடைக்கவில்லை என்றால் ஹசரங்காவுக்கு (Wanindu Hasaranga) ஏலத்தில் முழு மூச்சில் சிஎஸ்கே இறங்கும்.