கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்தால் போதும்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் சில ஆரோக்கியமான தினசரி உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் உதவுகின்றன.
பூண்டு: தினமும் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் (LDL Cholesterol) அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி: இஞ்சி பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட அற்புத மசாலாவாக பார்க்கப்படுகின்றது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதோடு கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் பங்களிக்கின்றது. இஞ்சியில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்தும் ஏராளமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிள், பேரிக்காய், பிளம், சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், கேரட், கீரை வகைகள் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மோர்: மோர் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும். இது இயற்கையான முறையில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த புரோபயாடிக் பானமாக கருதப்படுகின்றது. இது கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படும் குடல் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மோரில் உள்ள பண்புகள் குடலில் உள்ள கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கின்றன.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலம் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இவை இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆலிவ் எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன. இதை சமையலில் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
முழு தானியங்கள்: ஓட்ஸ், பார்லி மற்றும் பிற முழு தானியங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த தானியங்களை உட்கொள்வதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
உலர் பழங்கள்: பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற கொட்டைகள் உடலுக்கு நல்ல புரதச்சத்தை அளிக்கின்றன. அவற்றில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகின்றது. இது தவிர, இவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. எனவே அவை வயிறு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. தினமும் உலர் பழங்களை உட்கொள்வதால், கெட்ட கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.