தீபாவளி 2023: வழிபட வேண்டிய கோயில்களும்.... அதன் சிறப்புகளும்..!
ஸ்ரீரங்கம் - ரங்கநாத பெருமாள்: தீபாவளித் திருநாளில் ரங்கநாத பெருமாளை தரிசித்தால் ஆடைகளுக்கும், பண வரவுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படாது என்பது நம்பிக்கை.
மயிலாடுதுறை வள்ளலார் கோயில்: அமாவாசை தினத்தில் வழிபட்டால் பாவங்கள் போக்கி, புனிதம் கிட்டும் என்பது ஐதீகம்
திருநறையூர் நாச்சியார்கோவில்: மேதாவி மகரிஷி கடும்தவம் இருந்து சிவபெருமானிடம், ``மகாலட்சுமியே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றாராம். அதன்படி மகாலட்சுமி இத்தலத்தில் அவதரித்து, குபேரனுக்கு அருள்புரிந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஒரு கட்டத்தில்... தன் மகளுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனிடம் மேதாவி மகரிஷி வேண்டினார். இதை ஏற்று ஸ்ரீபார்வதி தேவி சமேதராகக் காட்சி தந்து, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து வைத்தாராம் சிவபெருமான். இந்த ஆலயத்தில் இருந்து, பட்டுப் புடவை, வேஷ்டி துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை, மேளதாளத்துடன் ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்கு எடுத்துச்சென்று, தீபாவளி சீராக வழங்குவது வழக்கம்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்: தீபாவளியை ஒட்டி வரக்கூடிய கேதார கௌரி விரதத்துக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதிதேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும், திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும் குறையற்ற இல்லறத்தையும் செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கௌரி விரதமாகும். தீபாவளியை யொட்டி கேதார கெளரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் ஆலயம்: திண்டிவனம்- புதுச்சேரி செல்லும் வழியில், வரகுப்பட்டி எனும் ஊருக்கு அடுத்துள்ள சாலையில் சுமார் 4 கி.மீ பயணித்தால், அன்னம்புத்தூர் எனும் ஊரை அடையலாம். இங்குள்ள அருள்மிகு நிதீஸ்வரர் ஆலயம் குபேரன் வழிபட்ட தலம். தீபாவளித் திருநாளில் வணங்கவேண்டிய தெய்வம் குபேரன். தீபாவளி விடுமுறையில் இந்த அன்னம் புத்தூருக்கும் சென்று குபேரன் வழிபட்ட நிதீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள். அவரருளால் உங்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பொங்கிப் பெருகும்.