விஜயகாந்தின் ‘இந்த’ புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், தனது 71வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம், தமிழகத்திற்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜயகாந்த், 1979ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். ஆரம்ப கட்டத்தில் சாதுவான ஹீரோக்களின் ரோலில் நடித்து வந்த இவர், பின்னர் தொடர்ந்து காவல் அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலர் ஆரம்ப கால திரை வாழ்க்கையின் போது பெரிதும் சிரமப்பட்டனர். அப்படி, மிகவும் சிரமப்பட்ட கலைஞர்களுள், விஜயகாந்தும் ஒருவர். இவர், தனது போஸ்டர் ஒட்டப்பட்ட சுவற்றுக்கு முன்பு நின்று சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சி.
விஜயகாந்த், தனது இளமைக்காலம் முதல் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஒரு திருமண மண்டபத்தை கட்டியிருந்தார். அது மட்டுமன்றி, தன்னை தேடி வருவோர் உதவி கேட்டால் தயங்காமல் செய்வார்.
விஜயகாந்த், தன்னுடன் பணிபுரிந்தவர்களை நல்ல முறையில் நடத்துவதற்கு பெயர் பெற்றவர். இவர் மீது பலருக்கு அரசியல் ரீதியாக மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், அவர்களும் இவரை உயர்வாகவே பேசுவர்.
விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர் சாமி. இவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், ரஜினிகாந்த். அவர் பெயரில் இருந்த ‘காந்த்’ஆல் ஈர்க்கப்பட்ட விஜயகாந்த், அதனை தன் பெயரின் பின்பாதியில் இணைத்துக்கொண்டார். இவர்கள் இருவரும் புகைப்பிடிக்கையில் எடுத்த புகைப்படம் இது.
விஜயகாந்த், தான் நடித்த பல படங்களுக்கு முதலில் சம்பளம் வாங்கியதில்லையாம். அப்படி சம்பளம் வாங்காத படங்கள், திரையரங்கில் ஓடி வெற்றி பெற்ற பிறகே சம்பள தொகையை பெற்றுக்கொள்வாராம். இவ்வளவு நல்ல மனம் படைத்த விஜயகாந்தின் மறைவு, ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே கலங்க வைத்துள்ளது.