Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Mon, 04 Jan 2021-6:44 pm,

திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பேரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்... ஆதாரப்பூர்வமாக திருமலையில் நடந்த முதல் திருமணம், திருப்பெரும்புதூர் சாம வேத விற்பன்னர் கேசவ சோமயாஜி என்பவருடையது. மணமகள் காந்திமதி அம்மையார்

 

நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுதும் தொகுத்தவர் நாதமுனிகளின் வம்சத்தில் வந்தவர் காந்திமதி. கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் திருமணம் நடந்து, இரு வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை யார் தெரியுமா?

 திருப்பதியில் நடைபெற்ற முதல் திருமணத்தில் பிறந்த வேதவித்து ஸ்ரீ ராமானுஜர்.  வடமொழியில் ஸ்ரீ ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர். திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்

 

காந்திமதியின் திருமணம் உலகம் போற்றும் மகனை உலகிற்கு அளித்ததற்கு திருப்பதி வேங்கடேசரின் அருள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

திருப்பதியில் இலவசமாக திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் அருமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  தேவஸ்தான இணைய தளத்திற்கு சென்று கல்யாணத் திட்டம் பகுதியில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர், வயது, ஆதார் அட்டை எண், திருமண நாள், நேரம் உள்ளிட்டவற்றை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

திருமணம் செய்வதற்கு பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மணமக்கள் அந்த ஒப்புகைச் சீட்டுடன் முகூர்த்த நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கல்யாண மண்டபத்திகு வந்து அலுவலர்களிடம் அதை கொடுக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டை ஊழியர்கள் சரிபார்த்த பின் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அது, மேள வாத்தியம், புரோகிதத்திற்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு, மணமக்களுக்கு இலவச அறை, மஞ்சள், குங்குமம், கங்கணம், அட்சதை உள்ளிட்டவற்றை தேவஸ்தான ஊழியர்கள் கொடுப்பார்கள். இதைத் தவிர திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மணமக்கள் கொண்டுவர வேண்டும்.

 

இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த திருமண திட்டத்தில் அனுமதி வழங்கப்படும். காதல் திருமணம், 2-ம் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

திருமணம் முடிந்த பின் 25 ரூபாய் கொடுத்தால் மணமக்கள், அவர்களின் தாய், தந்தை என 6 பேருக்கு விரைவு தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படும். 12 லட்டுகளும் புதுமண தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

திருமணம் செய்து கொள்பவர்கள் இலவசமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link