என்றும் இளமைக்கு... அத்திப் பழ ஜூஸ் குடிங்க... டாப் 5 நன்மைகள்!
அத்திப் பழம் உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. இருப்பினும், சிலர் அதனை தவிர்ப்பார்கள். அப்படி, அத்திப் பழத்தை வெறுமையாக சாப்பிட இயலாதவர்கள், அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸாக குடித்தால் ருசியாகவும் இருக்கும், உடலுக்கு நல்லதும் கூட...
அத்திப் பழம் சற்று விலை உயர்ந்தது என தோன்றலாம். நடுத்தர வர்க்கத்தினர் அதில் இருந்து தள்ளியிருப்பதற்கு முக்கிய காரணம் அதுதான். இருப்பினும், உங்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டுமுறையோ அத்தி பழ ஜூஸை குடியுங்கள். இருப்பினும், அத்திப் பழ ஜூஸை எத்தனை நாள் இடைவெளியில் குடிக்கலாம் என உங்களின் மருத்துவரை கூட அணுகுவது நலம். அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகளை தொடர்ந்து காணலாம்.
தூக்கமின்மையை போக்கும்: அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை சரியாகும் என கூறப்படுகிறது. அத்திப் பழ ஜூஸில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
சுகர் பிரச்னையா...?: தினமும் அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தள்ளியிருக்கலாம். இதில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid) ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இருப்பினும், நீரிழிவு பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பின் அருந்தலாம்.
எடையை சட்டுனு குறைக்கலாம்: அத்திப் பழத்தில் கலோரிகள் மிக குறைவு. இருப்பினும், நார்ச்சத்து அதிகம். இதனால், நீங்கள் வயிறு நிறைய குடித்தாலும் கலோரிகள் ஏறவே ஏராது. மேலும் அடிக்கடி பசியும் எடுக்காது. இதன்மூலம், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.
ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்: பொட்டாசியம் அதிகளவில் இருப்பதன் மூலம், சோடியத்தால் (சமையல் உப்பு) உடலுக்கு வரும் மோச விளைவுகளுக்கு எதிராக இது செயல்படும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும்.
சீக்கிரம் வயதாக மாட்டீர்கள்...: அத்திப் பழ ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்டாகச் செயல்படும் பீனாலிக் கலவைகள் அதிகம். மேலும், இதில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள், அந்தோசயினின்கள் இருக்கின்றன. அவை ஒவ்வாமை (Allergy) எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே, வயதாகும் தன்மையை இது மெதுவாக்குகிறது. குறிப்பாக, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.