Engineer`s Day 2020: விசுவேசுவரய்யா ஜெயந்தி பற்றிய கேள்விப்படாத சுவாரசிய தகவல்கள்

Tue, 15 Sep 2020-7:07 pm,

இவர் சீனிவாச சாஸ்திரிக்கும் வெங்கசம்மாளுக்கும் கர்நாடகத்தில் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது 15வது வயதில் தந்தையை இழந்தார். அச்சமயத்தில் இவரது குடும்பம் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலில் வசித்து வந்தது. இத்துயர நிகழ்வு காரணமாக அவர்கள் முட்டெனஹள்ளிக்கு திரும்பினார்கள். விசுவேசுவரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும் பெங்களூரிலும் தொடர்ந்தார். இளங்கலை படிப்பை 1881 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் கட்டட பொறியியல் படிப்பை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தார்.

பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா பாம்பே பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்பு இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். இவர் தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1903 இல் புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் டைக்ரா அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுவப்பட்டது.

வெள்ளத்தில் இருந்து ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்க இவர் காரணமாகவிருந்தார்.

விசுவேசுவரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை திட்டக்கருத்து உருவாக்கத்திலிருந்து திட்டம் முடியும் வரை மேற்பார்வையிட்டார். இவ்வணை உருவாக்கிய நீர்த்தேக்கம் அச்சமயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது. 1894 ல் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரணமானார். இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.

1908ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் விசுவேசுவரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். 1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உருவாக்கிய இந்தியப்பேரரசின் ஒழுங்கின் நைட் கம்மாண்டர் (Knight Commander) என்ற பட்டம் இவருக்கு மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காகப் பிரித்தானியர்களால் வழங்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1955 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கின. இந்திய அறிவியல் காங்கிரசின் 1923 ஆம் ஆண்டு அமர்விற்கு இவர் தலைவராக இருந்தார்.

நூல்கள்

இந்தியாவின் மீள்கட்டமைப்பு (1920) திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934)

நினைவுச் சின்னங்கள்

விசுவேசுவரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சி யகம், பெங்களுரு. விசுவேசுவரய்யா தொழில்நுட்பப் பல்கலைகழகம் (தலைமையகம், பெல்காம்) விசுவேசுவரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம்,நாகபுரி மராட்டிய மாநிலம். விசுவேசுவரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை, பத்ராவதி.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link