EPS பம்பர் செய்தி: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்? முக்கிய அப்டேட் இதோ

Wed, 11 Sep 2024-4:19 pm,

அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக, மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது யுபிஎஸ் -ஐ (UPS) அறிமுகம் செய்தது. இதன் கீழ் 25 ஆண்டுகளுக்கு பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு, அவரது பணி ஓய்விற்கு முந்தைய 12 மாத சராசரி ஊதியத்தில் 50 சதவீத தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். UPS 1 ஏப்ரல், 2025 முதல் நாட்டில் அமலுக்கு வரும். 

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைத்துள்ள நிலையில், ஊழியர் வருங்கால வைப்ப நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வரும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் ஒரு புதிய மகிழ்ச்சிகரமான அப்டேட் வந்துள்ளது. 

EPFO -வின் கீழ் செயல்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டமான EPS மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர், இது குறித்து சமீபத்தில் ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

சமீபத்தில் சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்த கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

EPF ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் தங்கள் கடிதத்தில் ஒரு முக்கிய விஷயத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட UPS மூலம் சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், EPS -இன் கீழ் சுமார் 75 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

அதிக ஓய்வூதியதாரர்களுக்கு நலன்களை அளிக்கும் வகையில் உள்ள இந்த கோரிக்கைகளை புறக்கணிப்பது சரியானது அல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் தொடர்பான இந்த விவகாரம் பிரதமர் மோடியிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜூலை 2024 -இல் ஓய்வூதியதாரர்களின் அமைப்பான இபிஎஸ் 95 தேசிய போராட்டக் குழு ஓய்வூதியத்தை (Pension) ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக டெல்லியில் போராட்டம் நடத்தியது. 2014 செப்டம்பரில், மத்திய அரசு, பணியாளர்கள் ஓய்வூதிய திட்டமான EPS 1995 -இன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அறிவித்தது. எனினும் கடந்த ஆண்டு தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து ஒரு முன்மொழிவை அனுப்பி, இபிஎஸ் 95 இன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு இன்னும் நிதியமைச்சகம் ஒப்புதலை அளிக்கவில்லை.

இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. செப்டம்பர் 1, 2014 முதல், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. 

சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆக உயர்ந்தால், அது ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும்.

ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீத தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) அளிக்கும் பங்களிப்பு முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 8.33 சதவீதம் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திலும் (இபிஎஸ்), 3.67 சதவீதம் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலும் (இபிஎஃப்) டெபாசிட் செய்யப்படுகின்றன.

EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான தற்போதைய சூத்திரம் பின்வருமாறு: கடந்த 60 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம் X வேலை காலம்/70.

பொறுப்பு துறப்பு: இந்த கணக்கீடுகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே அளிக்கப்படுள்ளன. உண்மையான கணக்கீடுகள் காலப்போக்கில் செய்யப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். சமீபத்திய மற்றும் துல்லியமான வட்டி விகிதம் மற்றும் பிற தகவல்களுக்கு அவ்வப்போது EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link