PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்

Thu, 19 Sep 2024-9:49 am,

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. இந்த புதுப்பித்தல்கள் மூலம் அவர்களுக்கு பல வித வசதிகளும் நிவாரணங்களும் கிடைக்கும். செவ்வாயன்று, அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்தது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு மாற்றப்பட்டுள்ளது. செவ்வாயன்று, அரசாங்கம் இது குறித்த ஒரு பெரிய முடிவை எடுத்தது. இது குறித்து கூறிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா,  ‘இனி, இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை கணக்கில் இருந்து எடுக்கலாம். முன்னதாக பிஎஃப் கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்.’ என்றார்.

அரசின் இந்த முடிவுகளால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பெரிய வசதி கிடைத்துள்ளது. முன்னர், திடீரென பணத்தேவை ஏற்பட்டால், 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது அது இரட்டிப்பாகி 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். 

PF கணக்கு தொடர்பான மற்றொரு மாற்றமும் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆவதற்கு முன்னதாகவே, தனது இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க விரும்பினால், அவர் இப்போது அவ்வாறு செய்ய முடியும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

முன்னர், இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, குறைந்தது அந்த நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிபந்தனை இல்லை. 

இந்த புதிய மாற்றங்களுடன், அரசாங்கம் மற்றொரு முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளது. EPFO இன் ஒரு பகுதியாக இல்லாத நிறுவனங்கள், மாநில அரசுகளால் நடத்தப்படும் வருங்கால வைப்பு நிதியைப் பயன்படுத்தலாம். 1954 இல் EPFO ​​நிறுவப்படுவதற்கு முன்பு நிறுவப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சொந்த ஓய்வூதிய நிதிகளையும் நடத்தலாம். 

இதுபோன்று மொத்தம் 17 நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், அவற்றுடன் உள்ள நிதி ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் விரும்பினால், அவர்கள் தங்கள் தனியார் நிதிகளுக்குப் பதிலாக EPFO ​​ஐயும் தேர்வு செய்யலாம்.

வருங்கால வைப்பு நிதியானது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குகிறது. பணியாளர்களின் பணி ஓய்வு கலாத்திற்கான முக்கியமான சேமிப்பாக இது பார்க்கப்படுகின்றது. 

ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்த பங்கில், 8.67% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS) மீதமுள்ள 3.33% பிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது. 

இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் இபிஎஃப் இருப்புத்தொகைக்கு (EPF Balance) பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டியும் அளிக்கின்றது. தற்போது 2023-24 நிதியாண்டுக்கு இபிஎஃப் தொகைக்கு 8.25% வட்டி அளிக்கப்படுகின்றது.

இது தவிர இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு கார்பஸ் தொகையை தவிர ஓய்வூதியமும் கிடைக்கின்றது. சமீபத்தில் சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்த கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு அவ்வப்போது EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link