பெஞ்சல் புயலின் நடு கண்பகுதி எந்த இடத்தில் உள்ளது? சாட்டிலைட் புகைப்படங்கள்
பெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், அதன் லேட்டஸ்ட் சாட்டிலைட் புகைப்படங்கள்
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் பெஞ்சல்/ஃபெஞ்சல் (Fengal Cyclone) தமிழ்நாட்டில் இன்று கரையை கடக்கிறது. இந்த புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கரையை கடக்கும்.
இதனால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் (Red Alert) கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண முகாம்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அரசின் நிவாரண முகாம்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பெஞ்சல் புயல் பிற்பகல் கரையை கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்மலாக 60 கிமீ முதல் தரைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த புயலில் முதலில் வலுவிழக்கும் என்றே வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டது. ஏனென்றால் வங்கக்கடலில் நிலவிய காற்றின் சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர், திசை மாற்றம் காரணமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று திடீரென ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழ்நாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. முதலில் 7 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்த பெஞ்சல் புயல் இப்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தரையை நோக்கி நகரும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும். புயலின் கண் பகுதி கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 90 கிமீ வேகம் காற்று வீசும்.