கிசுகிசு : காட்பாடியார் கடுப்புக்கு காரணம் இதுதானாம் - துமு வேண்டும் என கறார்..!

Wed, 28 Aug 2024-11:14 am,

கோட்டை வட்டாரத்தில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த டீ மாஸ்டர், குசும்பன் வருகையை எதிர்பார்த்து காரசாரமாக சுண்டல் தயார் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கடைக்கு வந்த குசும்பன், "அண்ணே! சுண்டல் வாசனை இழுக்குதே" என சொல்ல, "வந்துட்டீயா குசும்பா, உனக்கு தான் ரெடி பண்ணிட்டு இருக்கேன்" என்றார் டீ மாஸ்டர்.

"விஷயமில்லாம எனக்கு ஏதும் கொடுக்கமாட்டீங்களே?, என்ன வேணும்னு கேளுங்க" என்றான் குசும்பன். "அதுதாம்பா... கோட்டை மேட்டரு பத்தி நாளு நாளா எனக்கு எந்த தகவலும் வரல. என்ன விஷயம்?" என சுண்டலை ஒரு கப் கொடுத்துக் கொண்டே கேட்டார் டீ மாஸ்டர்.

 

"அண்ணே! இதுதான் உங்க கேள்வியா...?, சொல்றேன் சொல்றேன்" என விஷயத்தை ஆரம்பித்தான் குசும்பன். " அண்ணே..! துமு புரோமோஷன் விஷயத்துல காட்பாடியார் செம அப்செட்டில் இருக்கிறார். சீனியர்கள் இருக்கும்போது மகனுக்கு மட்டும் புரோமோஷன் கொடுக்கிறத நாங்க நிச்சயமா ஏத்துக்க மாட்டோம் என ஒரு கட்டைய குறுக்கால போட்டிருக்கிறார்.

கூடவே, தனக்கு நெருக்கமான சீனியர்கள் கிட்டயும் இதைப் பத்தி தன்னோட ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். அப்போ.. அவருக்கு சப்போர்ட்டா இன்னும் ரெண்டு சீனியர்களும் சேர்ந்து, அதான் பாருங்கண்ணே! இத்தனை நாளா கட்சிய காபாத்திட்டு இருக்கிற நமக்கு பொறுப்பு கொடுக்கிறத பத்தி யோசிக்காமா, மகனுக்கு உடனே புரோமோஷன் கொடுக்க முதன்மையானவர் ரெடி ஆயிட்டாரே?

 

எங்களை கூட விடுங்க, உங்களுக்காவது துமு கொடுக்கலாம். ஆனால், அதைபத்தி கொஞ்சம் கூட நினைச்சு பாக்கலயே..! என தங்கள் மனசுல இருந்த ஆதங்கத்தையும் சொல்லியிருக்கிறாங்க. இதைக் கேட்ட காட்பாடியாருக்கு முதன்மையானவர் மேல இன்னும் கொஞ்சம் கடுப்பு கூடிருச்சாம்.

 

அதனால, முதன்மையானவர் கிட்ட பேசுறத குறைச்சிகிட்ட அவரு, தன்னோட அதிருப்திய எல்லா வகையிலும் காட்டிட்டு வர்றாராம். அவரு கூட சீனியர்கள் ரெண்டு மூனு பேரும் சேர்ந்து ஒரு டீமாவும் இருக்கிறாங்களாம். 

 

இந்த விஷயம் முதன்மையானவர் காதுக்கும் போய் இருக்கு. அதனால தான் கேபினட் மாற்றத்தை தள்ளி போட்டிருக்கிறாராம். சிறையில் இருக்கிற மாஜி பெயில் வழக்கும் தள்ளி போறதால, இப்போதைக்கு  மகனுக்கு துமு கொடுக்கிற விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறாராம். 

 

மாஜி பெயில் வழக்குல நல்ல ரிசல்ட் கிடைச்சிருச்சின்னா, உடனே கேபினட் மாற்றம் ஜரூரா நடக்க வாய்ப்பு இருக்கு. இதுக்காக எல்லா பட்டியலையும் முதன்மையானவர் ரெடி பண்ணி வச்சிருக்கிறார். கட்சிக்குள்ள சீனியர், ஜூனியர் பிரச்சனை வந்திருக்கிறதால ரெண்டு தரப்பையும் சமாளிக்க ஒரு ஐடியாவையும் போட்டு வச்சிருக்கிறாராம்.

 

அதாவது, சீனியர்களை சமாளிக்க ஒரு துமு பதவியும், மகனுக்கு ஒரு துமு பதவியும் கொடுத்து காட்பாடியார சமாளிச்சிருலாம்னு முடிவு பண்ணியிருக்கிறாராம் முதன்மையானவர். அதுமட்டும் இல்லாம, ஏற்கனவே வட மாவட்டத்தில குறிப்பிட்ட தரப்பு மக்கள் கட்சி மற்றும் ஆட்சி மேல கோபமா இருக்கிறதால, அவங்களையும் சமாளிக்கவே காட்பாடியாருக்கு துமு பதவிய கொடுக்கலாம்னு நினைக்கிறாராம்.

 

காட்பாடியாருக்கு துமு கொடுத்தால் கட்சிக்குள்ள சீனியர்கள் அதிருப்தியை சமாளிச்சிருலாம், மகனுக்கும் துமு புரோமோஷன் கொடுத்துறலாம், வட மாவட்ட அதிருப்தி மக்களையும் சமாளிச்சிருலாம் என்பது தான் ஒரே கல்லுல மூனு மாங்காய் அடிக்கும் முதன்மையானவரின் மாஸ்டர் பிளான். 

ஒபாமா ஊருக்கு போய் இருக்கும் முதன்மையானவர், அந்த பயணத்தை முடிச்சுட்டு வந்ததும் இந்த பிளானை செய்யப்போறாரு. கூடவே சிறை மாஜிக்கு பெயில் கிடைத்தால் அவருக்கும் பவர்புல் போஸ்டிங்கும் கொடுத்து எல்லாத்தையும் சரிகட்டிடுலாம்னு நினைக்கிறார் அவரு. 

 

இந்த கணக்கு சரியா வந்துரும்னு நினைக்கிற முதன்மையானவரின் நம்பிக்கைக்கு இன்னும் ஒருசில வாரங்களில் விடையும் கிடைச்சிடும்" என சொல்லிட்டு டீ மாஸ்டருக்கு சலாம் போட்டுட்டு கிளம்பினான் குசும்பன். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link