20வது ஓவரில் அதிக ரன்களை அடித்தவர் யார் தெரியுமா? ரொமாரியோ ஷெப்பர்டுக்கே 2வது இடம்தான்!
ஐபிஎல் தொடர் (Indian Premier League) என்றாலே அதிரடிக்கு பெயர் போனதுதான். மும்பை - டெல்லி அணிக்கு இடையே இன்று நடைபெற்ற லீக் போட்டியிலும் அதேதான் நடந்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி பவர்பிளேவில் 78 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்தது. இருப்பினும் மிடில் ஓவர்களில் சற்றே ரன் வேகம் குறைந்தாலும் கடைசி ஓவரில் ஷெப்பர்ட் மிரட்ட பெரிய ஸ்கோரை மும்பை எடுத்தது.
அந்த வகையில், ஐபிஎல் வரலாற்றில் (IPL History) 20ஆவது ஓவரில் அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். ஷெப்பர்ட் இன்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைதான் பிடித்துள்ளார். அப்படியென்றால் முதலிடத்தில் யார் என்பது இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
5. ஹர்திக் பாண்டியா: 2017ஆம் ஆண்டு ஏப். 6ஆம் தேதி ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஹர்திக் பாண்டியா 20ஆவது ஓவரில் 28 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.
4. ஷ்ரேயாஸ் ஐயர்: 2018ஆம் ஆண்டு ஏப். 27ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி ஓவரில் 28 ரன்களை குவித்தார். இவர் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
3. ரிங்கு சிங்: கடந்தாண்டு ஏப். 9ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 30 ரன்களை குவித்தார். இவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்.
2. ரொமாரியோ ஷெப்பர்ட்: இன்றைய (ஏப். 7) போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 4,6,6,6,4,6 என 32 ரன்களை குவித்தார் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட். இதன்மூலம், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
1. ரவீந்திர ஜடேஜா: 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் 36 ரன்களை அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.