`Dream 11 ஒரு மோசடி செயலி...` லட்சக்கணக்கில் ரூபாயை பறிகொடுத்த நபர் - பின்னணி என்ன?

Fri, 26 Apr 2024-8:21 pm,

DREAM 11 செயலியில் சாப்ட்வேர் மூலமாக நிறுவனத்தின் ஆட்களை பயன்படுத்தி அதிக பரிசுகளை பெறவைத்து மோசடி நடைபெறுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விருதுநகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், வரி செலுத்துவதில் மோசடி நடைபெறுகிறதா என விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளார். 

 

உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச தொடர்கள் வரையிலும், கபடி, கால்பந்து உள்ளிட்டபோட்டிகளின் போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக ஃபேன்டஸி போட்டி நடத்தி பணம் வசூலித்து, அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபர்களுக்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

 

இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. இந்த செயலிகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும் விளம்பரம் செய்துவருகின்றனர் இதில் தற்போது இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ரூபாய் கொடுத்து பங்கு பெற்று வருகின்றனர். இந்த செயலிகளில் மொத்த போட்டியாளர்கள், குழுப்போட்டியாளர்கள், தனி தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கேற்ப பணம் கட்டி விளையாடப்படுகிறது. 

 

கிரிக்கெட் போட்டியை எடுத்துக்கொண்டால், இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டினால் அன்றைய போட்டியின் போது, ரசிகர்கள் தேர்வு செய்த விளையாட்டு வீரர்கள் ஆடும் ஒவ்வொரு ரன், கேட்ச், விக்கெட் என அதற்கேற்ப ஸ்கோர் வழங்கப்படும். அதனடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் செயலி மூலம் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும்.

 

இதில் நாள்தோறும் ஒவ்வொரு போட்டிகளிலும் நாடு முழுவதும் பல கோடிக்கணக்கானோர் 20 ரூபாய் தொடங்கி 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி விளையாடிவருகின்றனர். இந்த விளையாட்டி தொடர்பான ஆஃப்களில் பிரபலமான மொபைல் செயலி DREAM -11 ஆகும். இந்த செயலி அதன் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, Dream 11 மொத்தம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதன் தாய் நிறுவனமான Dream Sports-க்கு கடந்தாண்டு சம்மன் அனுப்பப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் தமிழக காவல்துறை தலைவருக்கு புகார் அளித்த நிலையில், நேற்று மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தார். அந்த புகாரில், "DREAM 11 செயலியில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள் கோடிக்கணக்கான போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக 200 போட்டியாளர்களை போன்று சொந்த நிறுவனத்தின் ஆட்கள் பெயரில் விளையாடவைத்து தொடர்ந்து மோசடி நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முதல் பரிசு பெறும் வகையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்களின் பணத்தை ஏமாற்றப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் "இதுபோன்ற நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துகிறார்களா என சந்தேகம் உள்ளது. இது போன்ற பொதுமக்களை ஏமாற்றும் Dream 11 நிறுவனத்தில் மோசடி குறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்யாண குமார், "DREAM 11 செயலி மூலமாக பொதுமக்களின் பணத்தை நிறுவனத்தின் ஆட்களை வைத்து அதிக போட்டிகளில் விளையாடவைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருவதால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எனக்கே ரூ. 6 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link