1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!
திருமண உறவில் ஆண் - பெண் இடையே பிரச்னை வருவது என்பது வாடிக்கையானதுதான். உங்கள் தாத்தா - பாட்டி, அப்பா - அம்மா யாரிடம் கேட்டாலும் சண்டைப் போடாமல் அவர்கள் வாழ்க்கையை நடத்தியிருக்க மாட்டார்கள்.
இருப்பினும், அவர்கள் நீண்ட காலத்திற்கு திருமண உறவில் வெற்றிகரமாக இருப்பதற்கு அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான். அந்த புரிதலை அதிகரிக்க இளம் தம்பதிகள் தங்களின் மூத்தவர்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
1-1-1-1 என்ற விதியை இளம் கணவன், மனைவி தெரிந்திருக்க வேண்டும். இதன்மூலம், தங்களுக்குள் தீவிரமான பிரச்னைகளோ, சண்டையோ வராமல் அவர்கள் தடுக்கலாம். இந்த எளிய விதி உங்களின் திருமண உறவை பலமாக்குவதில் முக்கிய பங்கும் வகிக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
1-ஒரு வாரம் விடுமுறை: அதாவது ஆண்டுக்கு ஒரு வாரம் உங்களின் அனைத்து விஷயங்களையும் விட்டு, பணிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு கணவன் - மனைவி மட்டும் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும். அதில் குழந்தைகளோ, மற்ற குடும்ப உறுப்பினர்களோ இல்லாமல் பார்த்துக்கொள்வது கூடுதல் நல்லது. இது கணவன் - மனைவிக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.
1-டேட்டிங்: திருமணமான பின்னரும் சரி வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ இருவரும் சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும். திரைப்படம் பார்ப்பதற்கு, புதுப்புது உணவுகளை தேடி சாப்பிடுவதற்கு என புதுப்புது இடங்களுக்கு தனியாக சென்று வருவது திருமண உறவில் புரிதலை அதிகரிக்கும்.
1-தினமும் அரைமணி நேரம்: தினமும் ஒருமுறை 30 நிமிடங்கள் தம்பதிகள் தங்களுக்குள் நேரம் செலவழித்துக் கொள்ள வேண்டும். தினமும் அரைமணி நேரம் தனியாக பேசலாம், அரைமணி நேரம் நடக்கலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த விஷயங்கள் கணவன் - மனைவி உறவை பலமாக்கும்.
1-வாரம் ஒரு உடலுறவு: கணவன் - மனைவிக்கு இடையிலான பாலியல் வாழ்வும் ரொம்பவே முக்கியம். எனவே, வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவு வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். திருப்தியான பாலியல் வாழ்வு நிம்மதியான குடும்ப வாழ்வுக்கு இட்டுச்செல்லும். இதனால், இருவருக்கு இடையிலான நெருக்கம் குறையவே குறையாது.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை