உங்கள் காதலருக்கு இந்த 4 குணங்கள் இருந்தால்... திருமணத்திற்கு ஓகே சொல்லாதீர்கள்
திருமணம் என்பதுதான் வாழ்க்கை எனும் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆகும். வாழ்வில் வெற்றி பெற முதல் இன்னிங்ஸில் மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடியாக வேண்டும்.
இதில், உங்கள் தேர்ந்தெடுக்கும் பார்ட்னரும் முக்கியம். காதலித்து திருமணம் செய்தாலும் சரி, பெற்றோர் பார்த்து செய்துவைக்கும் திருமணம் என்றாலும் சரி, பார்ட்னரின் குணங்களை நன்கு தெரிந்துகொண்டு மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
அந்த வகையில், நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர்களிடம் இந்த 4 குணங்கள் இயல்பாகவே மேலோங்கி இருக்கும்பட்சத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பது நல்லது. இந்த 4 கெட்ட குணங்கள் உங்கள் வாழ்வில் நிம்மதியை இழக்கச் செய்யலாம். இதுகுறித்து விரிவாக காணலாம்.
உறவில் நம்பிக்கை என்பது மிக முக்கியமானது. பார்ட்னர் மீது உங்களுக்கு நம்பிக்கையோ, பிடிப்போ இல்லாதபட்சத்தில் அந்த உறவு பலவீனம் அடையும். பார்ட்னர் உங்களிடம் அடிக்கடி பொய் சொல்கிறார் என்றாலோ பொறுப்புகளில் இருந்து தப்பிச் செல்கிறார் என்றாலோ எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய சிக்கல் வரலாம்.
இயல்பிலேயே உங்கள் பார்ட்னர் அதிகம் கோபப்படுபவர் என்றால் நீங்கள் அப்போதே உஷாராக வேண்டும். சிறு சிறு விஷயங்களுக்கும் உச்சகட்ட கோபத்தை உங்களிடம் காட்டினால் திருமண வாழ்வு இனிக்காது. தொடர்ந்து சண்டை சச்சரவுகள் உறவில் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, திருமணத்திற்கு முன்னரே நோ சொல்வது நல்லது.
இயல்பிலேயே பார்ட்னர் உங்களை கட்டுப்படுத்தும் பேர்வழியாக இருக்கிறார் என்றால் உடனே உஷாராக வேண்டும். இந்த சட்டையை போடாதே, இந்த டிரஸ் போட்டு வெளியே போகாதே, இதை செய், அதை செய்யாதே என ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் நினைப்பதையும், தங்களுக்கு பிடித்ததைதான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என நினைப்பது திருமண உறவில் பிரச்னை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் உங்களுக்கு என சுதந்திரம் இல்லாமல் போய்விடும், உங்களின் கருத்துக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். எனவே, எதிர்காலத்தில் இந்த மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
அதேபோல் உங்கள் பார்ட்னர் எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே யோசிக்கிறார் என்றாலும் நீங்கள் உஷாராவது நல்லது. வாழ்வில் பிரச்னை இல்லாமல் போக நேர்மறையான சிந்தனை மேலோங்கி இருக்க வேண்டும். எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கும் நபரை திருமணம் செய்தால் வாழ்வு நரகம் ஆகலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த கருத்துகள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.