மொபைல் போன்கள் இனி சார்ஜர் இல்லாமலேயே சார்ஜ் ஆகும்..! எப்படி?

Sun, 25 Feb 2024-11:20 pm,

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐஐடி மண்டியின் ஆராய்ச்சியாளர்கள் உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அற்புதமான ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நீண்டகால தாக்கங்களைச் செலுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

 

இந்தத் தொழில்நுட்பத்தை பல்வேறு பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படலாம். தெர்மோநியூக்ளியர் மெட்டீரியல் பற்றிய அறிவிப்பை ஐஐடி மண்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இப்போது ஜெர்மனியின் அறிவியல் இதழான Angewandte Chemie இல் இத்தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

 

ஐஐடி மண்டியின் இயற்பியல் அறிவியல் பள்ளியின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஜய் சோனி இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தார். அவர், தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் ஒரு பதிவை கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

"நெகிழ்வுத்தன்மை கொண்ட தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் மற்றும் தெர்மோஎலக்ட்ரிக் விளைவை ஏற்படுத்தும் மனித தொடுகை சென்சார் குறித்த எங்கள் சமீபத்திய ஆய்வு இறுதி வடிவம் இதோ" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த சாதனம் மனித தொடுகையால் சார்ஜ் செய்யத் தொடங்கும். இதன் மூலம் எந்த எலக்ட்ரானிக் கேஜெட்டையும் சார்ஜ் செய்யலாம் என்று ஐஐடி மண்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சி குழு சில்வர் டெல்லூரைடு நானோவயரில் இருந்து தெர்மோஎலக்ட்ரிக் தொகுதியை உருவாக்கியுள்ளனர். மனிதத் தொடுதலின்போது இந்தத் தெர்மோ எலக்ட்ரிக் தொகுதி குறிப்பிடத்தக்க வெளியீட்டு மின்னழுத்தத்தை வழங்கத் தொடங்குகிறது என்று விளக்குகின்றனர்.

 

"குறைந்த சக்தி கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்வது இனி பிரச்சனை இல்லை. அவற்றை மனித உடலின் வெப்பத்தால் சார்ஜ் செய்ய முடியும். அதற்கான தெர்மோஎலக்ட்ரிக் மாட்யூலை உருவாக்கிவிட்டோம்" என்று டாக்டர் அஜய் சோனி கூறுகிறார். நேரடியாக வெப்பத்தை மின்சாரமாக அல்லது மின்சாரத்தை வெப்பமாக மாற்றுவது தெர்மோஎலக்ட்ரிசிட்டி என்று குறிப்பிடப்பட்டுகிறது.

 

தெர்மோஎலக்ட்ரிக் விளைவின் முதல் பகுதி வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவது. 1821ஆம் ஆண்டில் எஸ்டோனிய இயற்பியலாளர் தாமஸ் சீபெக் என்பவரை இதனைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பெல்டியர் இது குறித்து இன்னும் விரிவாக ஆராய்ந்தார். இதனால், இதனை பெல்டியர்-சீபெக் விளைவு என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.

 

இதன் தலைகீழ் செயல்பாடான, ஒரு பொருளின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் வெப்பம் அல்லது குளிர்ச்சியை உருவாக்கும் நிகழ்வு 1851ஆம் ஆண்டில் வில்லியம் தாம்ஸனால் கண்டுபிடிக்கப்பட்டது. கெல்வின் என்ற வெப்பநிலை அலகுக்கு இவரது பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link