ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்
இந்தியாவில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் ரயில் பயணம் தான் சிறந்தது. பட்ஜெட் பிரண்ட்லி, பயண செலவுகள் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், டிக்கெட் எடுக்காமலே இலவசமாக இயக்கப்படக்கூடிய ரயில் (Indian Railways Free Train) ஒன்றும் இருக்கிறது. வருஷம் 365 நாட்களும் இந்த ரயில் இலவசமாக இயக்கப்படுகிறது. ரயில் பயணிகள் டிக்கெட்டே எடுக்க தேவையில்லை.
சாதாரணமாக நீங்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் டிக்கெட் எடுத்தாக வேண்டும். டிக்கெட் எடுக்கவில்லை என்றால் அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட பெற நேரிடும். ரயில்நிலையத்தில் இருக்கும் நடைமேடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட அதற்கான டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்படி ரயில்வே டிக்கெட் விதிமுறைகளை கடுமையாக வைத்திருக்கும் இந்திய ரயில்வே, ஒரே ரயிலை மட்டும் விதிவிலக்காக இயக்கி வருகிறது. அந்த ரயிலுக்கு பயணிகள் யாரும் டிக்கெட் எடுக்க வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம். சுமார் 75 ஆண்டுகளாக அந்த ரயில் இலவசமாக இயக்கப்படுகிறது என்பது தான் வியப்புக்குரிய சாதனையான அம்சம்.
அந்த ரயில் தான் பக்ரா-நங்கல் ரயில். சுமார் 75 ஆண்டுகளாக சேவையில் உள்ள இந்த ரயில், பஞ்சாப் மாநிலம் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா இடையே இயக்கப்படுகிறது. சுமார் 13 கி.மீ தூரம் பயணிக்கிறது. வெறும் 13 கிலோ மீட்டரா? என சாதாரணமாக நீங்கள் நினைக்காதீர்கள். இந்த இடைவெளி தூரத்தில் தான் இந்தியாவின் மிக அழகிய இயற்கை காட்சிகள் எல்லாம் இருக்கின்றன.
அழகிய சட்லஜ் நதி, ஷிவாலிக் மலைகளைக் கடந்து பக்ரா-நங்கல் ரயில் தினமும் செல்கிறது. அமேசிங் பயண அனுபவத்தை கொடுக்கும் இந்த ரயில் பயணத்துக்கு ஒரு பைசா கூட இந்திய ரயில்வே டிக்கெட் வசூலிப்பதில்லை. பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்திற்காக தொழிலாளர்களையும் பொருட்களையும் கொண்டு செல்ல இந்த ரயில் வழிப்பாதை முதலில் பயன்படுத்தப்பட்டது.
சுமார் 75 ஆண்டுகளாக சேவையில் இருக்கும் இந்த ரயில் 1948 முதல் இயங்கி வருகிறது. இந்த ரயில் முதலில் நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது.
கூடுதல் சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் கராச்சியில் தயாரிக்கப்பட்ட மரப்பெட்டிகள் மூலம் ரயில் பெட்டிகள் இருக்கும். காலனித்துவ கால ரயில் பயணத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், இந்த ரயிலின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அதை கட்டணமில்லாது வைத்திருக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 800க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மிக உயரமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையையும், ஆறு நிலையங்கள் மற்றும் மூன்று சுரங்கப்பாதைகள் வழியாக இந்த ரயில் பயணிக்கும். அழகிய சிவாலிக் மலைகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இந்தியர்கள் ஒருமுறையாவது இந்த ரயிலில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்.