இங்கிலாந்து மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவையும் அலறவிட்டிருக்கும் இந்தியா - பாயிண்ட்ஸ் டேபிள பாருங்க.!
ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றி இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும் பதிவானது. இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது மோசமான தோல்வியாக மாறியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தாலே, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றுவிடக்கூடிய வாய்ப்பு இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.
அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளில் நம்பர் ஒன் இடத்துக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்போது இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை நியூசிலாந்து முதல் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தன. ஆனால் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இப்போது 2வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 8வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. அந்த அணி அடுத்து வரும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் கூட முதல் இடத்துக்கு முன்னேறும் என்றாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் இந்திய அணியே நம்பர் ஒன் இடத்துக்கு செல்ல முடியும்.
அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் பிரகாசமாகும் என்பதால் இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.