இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படலாம்...? - இந்த ஒரே ஒரு வழி இருக்கிறது!
இந்திய அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து முக்கிய வீரர்களான நட்சத்திர வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது, கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ அறிவுறுத்தலின்படி, ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாததால் அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆண்டு ஒப்பந்தத்தின் இந்த சுற்றின் பரிந்துரையில் மட்டுமே ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அனைத்து விளையாட்டு வீரர்களும் தேசிய அணிக்கு விளையாடாத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ பரிந்துரைக்கிறது" என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பிசிசிஐ சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"தேர்வுக்குழுவினருக்கு இவ்விருவரின் திறன் மீது எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், என்சிஏ உங்களுக்கு உடற்தகுதி இருக்கிறது என சான்றளித்த பின்னர் நீங்கள் டெஸ்ட் தொடரில் விளையாட மறுத்தால், பிசிசிஐ எப்படி ஒப்பந்தத்தை நீட்டிக்கும். ஐபிஎல் தொடர்களுக்கு பின்னர், அவர்கள் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகி, pro-rata ஒப்பந்தத்திற்கு ஏற்ற எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடினால் அவர்கள் மீண்டும் ஒப்பந்தத்தில் இடம்பிடிக்கலாம்" என்றார்.
அதாவது, வீரர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஓடிஐ போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும்பட்சத்தில் அவர்கள் நேரடியாக ஒப்பந்தத்தில் C தரவரிசையில் pro-rata அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வீரர்கள் மேற்குறிப்பிட்ட போட்டிகளை விளையாடினால் அவர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள்.
ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட உள்ளார். தற்போது இவர் டிஒய் பாட்டீல் தொடரில் விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் நாளை நடைபெறும் ரஞ்சி டிராபி அரையிறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படுவார்.