Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் தங்களின் ரீசார்ஜ் பிளான்களின் விலையை சுமார் 25% வரை உயர்த்தி உள்ளன.
கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் இந்த மூன்று நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சற்று அதிருப்தியில் இருக்கிறார்கள் எனலாம்.
குறிப்பாக, ஜியோ நிறுவனம் அனைத்து பிளான்களுக்கும் வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வந்த நிலையில், இனி தினமும் 2ஜிபி அல்லது அதைவிட அதிக ஜிபி டேட்டா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ஒட்டுமொத்தமாக அதன் விலையை உயர்த்தி உள்ளது. 5ஜி குறித்த தனது அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்ல் ஆகியவை 4ஜி சேவையை மட்டுமே இன்னும் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் அனைத்து விதமான பிளான்களும் விலையும் உயர்ந்தப்பட்டதால் Data Add-On திட்டங்களின் விலையும் உயர்ந்துள்ளன. 1ஜிபி, 2ஜிபி என தனியாக தனியாக குறைவான விலையில் ரீசார்ஜ் செய்த நிலையில் இதன் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்றிலும் Data Add-On திட்டங்களின் புதிய விலை நிலவரத்தை இங்கு காணலாம்.
ஜியோ நிறுவனம் 1ஜிபியை முன்பு 15 ரூபாய்க்கு வழங்கிய நிலையில் தற்போது 19 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2ஜிபி 25 ரூபாய்க்கும், 6ஜிபி 61 ரூபாய்க்கும் வழங்கப்பட்ட நிலையில் அது முறையே 29 ரூபாயாகவும், 69 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் முன்பு 1 நாளுக்கு 1ஜிபி டேட்டாவை 19 ரூபாய்க்கு வழங்கி வந்தது. அது தற்போது 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1 நாளுக்கு 2ஜி டேட்டா 29 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 33 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிளானின் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் 4ஜிபி Add-on பேக் 65 ரூபாயில் இருந்து தற்பது 77 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் இரண்டு Data Add-on பிளான்களில் விலையை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக, 1 நாளுக்கு 1ஜிபி டேட்டா 19 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 22 ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்னர் 1 நாள் வேலிடிட்டியில் 6ஜிபி டேட்டா 39 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 48 ரூபாயாக உயர்ந்துள்ளது.