கலைஞர் கனவு இல்லம்...இனி கடகடனு வீடு கட்டலாம்! - தமிழ்நாடு அரசு கொடுத்த பெரிய அப்டேட்
தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் (Kalaignar Kanavu Illam Scheme) கீழ் 2024-25ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கால இலக்கு: மேலும், "தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக 'அனைவருக்கும் வீடு' என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது" என எதிர்கால இலக்கு குறித்தும் தெரிவித்துள்ளது.
நிதிச்சுமையை குறைக்க...: அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில்,"நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு நேரடியாக நிதி: இந்த திட்டத்தில் பயனாளர்கள் நிதி அளிப்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,"வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல வரவேற்பு: வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது.
தற்போது ரூ.400 கோடி விடுவிப்பு: இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் யாருக்கு கிடைக்கும்?: மேலும், இந்த திட்டம் குடிசையில் வாழும் மக்களுக்கே கிடைக்கும். சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்காது. மொத்தம் ரூ.3.50 லட்சத்தில், ரூ.3.10 லட்சம் நிதியாகவும், மீதம் ரூ.40 ஆயிரம் இரும்பு கம்பி, சிமெண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்களாக கிடைக்கும்.